Takkar Review: ஆக்‌ஷன் அவதாரத்தில் சித்தார்த்; டாப் டக்கர் ரேசா, சோதிக்க வைக்கும் பயணமா?

பணக்கார வாழ்க்கையே நிம்மதியும் சந்தோஷமும் தரும் என ஓடும் இளைஞனும், அதீத பணத்தால் விரக்தியுடன் வாழும் இளைஞியும் சந்தித்துக்கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பதே இந்த `டக்கர்’.

அம்மா மற்றும் பள்ளி செல்லும் தங்கையுடன் கிராமத்தில் வறுமையில் வாழும் குணசேகரன் (சித்தார்த்), பணக்காரன் ஆகியே தீருவேன் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வந்து, பல வேலைகள் பார்க்கிறார். அவரின் தன்மானம் அவரின் வேலைக்கும் லட்சியத்திற்கும் தடையாக இருக்கிறது. வறுமை கழுத்தைப் பிடிக்க, தற்கொலை முடிவை எடுக்கிறார். இச்சூழலில், வில்லன் கும்பலால் கடத்தப்பட்ட பெரிய தொழிலதிபரின் மகளான மகாலெட்சுமியை (தியான்ஷா கௌஷிக்) சந்திக்கிறார். பணத்தின்மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்று, விரக்தியில் வாழும் ‘ரக்கட்’ பெண் மகாலட்சுமி. இந்தச் சந்திப்பும் இந்த முரணும் இருவரின் வாழ்விlum என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகின்றன, மறுபுறம் இருவரையும் துரத்தும் வில்லன் கும்பலிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு, எந்தப் புதுமையும் இல்லாத திரைக்கதையால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.க்ரிஷ்.

டக்கர் விமர்சனம்

பணக்காரன் ஆக வேண்டும் என ஓடும் துடிப்பான இளைஞனாகவும், காதலில் மறுகும் காதலனாகவும், ஆக்‌ஷன் நாயகனாகவும், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சித்தார்த். ஆனால், வழக்கமான இந்த ‘ஹீரோ’ கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக்க, இன்னும்கூட மெனக்கெட்டிருக்கலாம். கதாநாயகனுக்குச் சமமாகவே பயணிக்கிறது தியான்ஷா கௌஷிக்கின் கதாநாயகி பாத்திரம். தனது ‘ரக்கட்’ மேனரிஸத்தால் ரசிக்க வைக்கிறார். ஆனால், இறுதியில் அவரும் வழக்கமான கதாநாயகி ஆகிவிடுகிறார்.

காமெடிக்கு யோகி பாபு, விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் என மும்மூர்த்திகள் குறுக்க மறுக்க வருகிறார்கள். இதில் யோகி பாபு மட்டும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால், அந்த உருவகேலி வகை காமெடிகளை எப்போது விடுவார் என்பது அவருக்கே வெளிச்சம். ‘வில்லன்’ என்ற பெயரில் வரும் அபிமன்யு சிங்கிற்குப் பெரிய வேலை இல்லை. காமெடி டிபார்ட்மென்ட் செல்ஃப் எடுக்கவில்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, இவரே ‘சீரியஸான’ காமெடிகளையும் செய்துவிடுகிறார்.

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனும் படத்தொகுப்பாளர் ஜி.ஏ.கௌதமும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். முக்கியமாக, தினேஷ் காசி வடிவமைத்திருக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு இவர்களின் கூட்டணி கைகொடுத்திருக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் ‘நிரா நிரா’ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையில் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கவனம் பெறுகிறது இசை.

டக்கர் விமர்சனம்

கிராமத்து ஏழை கதாநாயகன், பணக்காரன் ஆக சென்னைக்குப் படையெடுப்பது, பல வேலைகள் பார்த்து அவமானப்படுவது, பணக்கார பெண்ணைப் பார்த்தவுடன் காதலிப்பது, கதாநாயகி, வில்லன், கதாநாயகனின் நண்பர், கதாநாயகனின் தங்கை போன்ற எல்லா கதாபாத்திர வடிவமைப்பும் திரைக்கதையும் ‘பழங்கால’ கதையாக ஒளியும் ஒலியுமாக முதற்பாதியில் ஓடுகிறது. பென்ஸ் கார் ஓட்டும் டாக்சி டிரைவர், அந்தக் காரை வாடகைக்கு விடும் சீனாக்காரர் என சில புதுமைகள் மருந்துக்கு என இருந்தாலும், அவை எதுவும் சுவாரஸ்யத்தைக் கூட்டாமல் அந்நியப்பட்டு நிற்கின்றன.

முதல் காட்சியில் அப்பாவியாக அனுதாபம் கோரி அழுவது, அடுத்த காட்சியே ‘திடீர்’ ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது எனக் கதாநாயகன் செய்யும் சாகசங்கள், ஹீரோயிசத்துக்கு உதவினாலும் அக்கதாபாத்திரத்தோடு உணர்வுரீதியாக ஒன்ற முடியாமல் செய்துவிடுகிறது. அதனால் அவரின் கோபம், அழுகை என எல்லாமே அழுத்தமின்றி கடந்துபோய்விடுகின்றன. உடலுறவைச் சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்வது, கஞ்சா அடிப்பது எனக் கதாநாயகிக்கு மட்டும் சில ‘அதிரடிகளை’ கொடுத்துக் கவனிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆள் கடத்தலைக் குடிசை தொழில் போலச் சாதாரணமாகச் செய்கிறார் வில்லன் அபிமன்யு சிங். ‘போலீஸ் தூங்குகிறதா?’ என நாம் போஸ்டர் ஒட்ட வேண்டும் போல! போதாக்குறைக்கு அவரும் காமெடியன்களோடு ஷேர் ஆட்டோ டிரிப் அடிப்பதைப் பார்க்கும்போது, அவர் மீது பயம் வருவதற்குப் பதிலாகப் பரிதாபமே வருகிறது.

டக்கர் விமர்சனம்

ஒரு ‘ரோட் டிராவல் படமாக’ மாற வேண்டிய இரண்டாம் பாதியும், காதல், பாடல்கள், காமெடிகள் என ‘நெடுஞ்சாலை’யாக நீண்டு நம்மை அயர்ச்சியடையச் செய்கிறது. அதிலும் இடையிடையே வரும் யோகிபாபு, விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் காமெடி ட்ராக்குகள் பார்வையாளர்களுக்கு ‘சோதனை சாவடிகளாக’ மாறுகின்றன. முதற்பாதியில், ‘ரக்கட்டாக’ காட்டப்படும் கதாநாயகி எந்த அழுத்தமான காரணமும் இல்லாமல், இலகுவாகி கதாநாயகன் பக்கம் சாய்ந்து விடுகிறார். திடீர் திடீரென குணாதிசயத்தில் தாவுவது, அக்கதாபாத்திரத்தின்மீது ஒரு குழப்பமான பார்வையையே தருகிறது. குறிப்பாகக் கதை முடிந்த பின்னரும் நாயகன் – நாயகி மோதல் எனக் கூடுதலாக 15 நிமிடங்கள் இழுத்திருக்கிறார்கள். ஒற்றை வசனத்தால் தீர வேண்டிய அந்தச் சிக்கலை வைத்து பார்ட் 2 கணக்காகக் காட்சிகளை ‘இழுழுழுழுழுத்தது’ கூடுதல் ஸ்பீட்பிரேக்கர்.

திரைக்கதை தொடக்கம் முதலே, எளிதில் யூகிக்கும்படியாக இருப்பதால், இறுதிக்காட்சியும் நம் `எதிர்பார்ப்பை’ பூர்த்தி செய்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி ஆறுதல் தருவது ஆக்‌ஷன் காட்சிகள் மட்டும்தான். மொத்தத்தில் எந்தவித புதுமையும் இல்லாமல் `டக்கரில்’, `டக்…’ என்றுகூடச் சொல்லிவிட முடியாத படமாகத் திருப்திப்பட்டுக்கொள்கிறது இந்த `டக்கர்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.