ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்: நோ சென்ன இறையன்பு – கோட்டையில் நிகழும் பெரிய மாற்றம்!

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது அதிகாரிகளாக, அமைச்சர்களாக அவர் தேர்வு செய்த பட்டியல் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அவற்றில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றமும், இனி நடக்க இருக்கும் மாற்றமும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் திமுக அரசு மீது இல்லாத விமர்சனங்கள் தற்போது முளைவிட்டு வரும் சூழலில் இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு இயந்திரத்தில் பெரிய மாற்றங்கள்!முதலமைச்சரின் முதன்மைச் செயலாளாராக இருந்த உதயச்சந்திரனின் நியமனம் அப்போது பாராட்டும் வகையில் பேசப்பட்டது. அதேபோல் நிதியமைச்சர் பொறுப்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கொண்டு வந்ததும் வரவேற்பு பெற்றது. இந்த இருவரது பொறுப்புகளும் தற்போது மாற்றப்பட்டுள்ளன. இது ஒரு புறமிருக்க தலைமைச் செயலாளர், தமிழ்நாடு டிஜிபி ஆகிய இருவரும் ஒரே சமயத்தில் பணி ஓய்வும் பெறுகின்றனர். இதனால் அரசு இயந்திரத்தின் வேகம் குறையுமா என்றும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி இவர்கள் தானா?புதிய தலைமைச் செயலாளராக பலரது பெயர்கள் அடிபட்ட போதும் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் முந்துவதாக சொல்கிறார்கள். அதே போல் தமிழ்நாடு டிஜிபியின் பதவியை பெறுவதற்கும் பலத்த போட்டி இருக்கும் நிலையில் சங்கர் ஜிவால் அதை தட்டிச் செல்வார் என்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் எல்லா பக்கமும் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஸ்டாலின் திட்டம் என்ன?இறையன்பு ஐஏஎஸ் அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டு இருந்த நிலையில் அவரது அனுபவத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் தலைமைச் செயலாளர் பதவியை ஸ்டாலின் அளித்தார். தற்போது பணி ஓய்வு பெறும் போதும் அவருக்கு வேறு முக்கிய பதவிகளை தர தயாராக இருந்துள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் இடங்கள் சில உள்ளன. அதிலும் மிக முக்கிய பொறுப்பு ஒன்றை இறையன்புக்கு கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளார். ஆனால் இறையன்பு வேறு திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஸ்டாலின் ஆஃபரை மறுத்த இறையன்புதமிழ்நாடு தகவல் ஆணையர் பதவியில் இறையன்புவை அமரவைத்தால் அவரது அனுபவமும், திறமையும் தமிழக அரசுக்கு தொடர்ந்து பயன்படும் என ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளார். மிக முக்கியமான துறையான அது கடந்த சில ஆண்டுகளாக தேக்க நிலையை சந்தித்துள்ளதாம். எனவே இறையன்பு வந்தால் புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என்பது தான் ஸ்டாலின் எண்ணம். ஆனால் இதற்கு இறையன்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக சொல்கிறார்கள். பணி ஓய்வு பெற்றதும் மீண்டும் அரசுப் பணி வேண்டாம், எழுத்துப் பணியை கவனிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.