எழும்பூர் ரயில்நிலையத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி பசுமைத் தாயகம்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 11.06.2023 ஞாயிறு மதியம் சென்னை ஈ.வே.ரா சாலையில் நடத்தப்பட்டது.

தென்னக இரயில்வே நிறுவனத்தின் பசுமை அழிப்பு நடவடிக்கையை கண்டித்து, ‘இனி வெட்டப்படவிருக்கும் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல், வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நட்டு வளர்த்தல், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் ஆகிய மாற்று வழிகளில் சாத்தியமானவற்றை தொடர்வண்டித்துறை செயல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியும், ‘இதற்கான திட்டத்தை தொடர்வண்டித் துறை வெளியிட வேண்டும்; தமிழக அரசு அதனை வலியுறுத்த வேண்டும்’ என்று கோரியும் இந்த நிகழ்ச்சி நடந்தது.

மேலும், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நேரு பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க பூங்கா, பனகல் பூங்கா, அடையாறு விளையாட்டுத் திடல் போன்ற பல பசுமைப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. மழைநீர் வடிகால் பணிகளுக்காக கே.கே. நகர் உள்ளிட்ட சென்னை நகரின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த அவல நிலை இனியும் தொடரக் கூடாது. தமிழ்நாடு மாநில பசுமைக் குழு (State Green Committee), சென்னை மாவட்ட பசுமைக் குழு (District Green Committee) ஆகியவை முழுமையாக செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பசுமைக் குழுக்களால் (Green Committees) போதுமான பயன் கிடைக்கவில்லை என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, நகரங்களில் மரங்களைக் காக்கவும், பசுமைச் சூழலை ஏற்படுத்தவும் ‘மரங்கள் ஆணையம்’ (Tree Authority) என்கிற அதிகார அமைப்பை, போதுமான அதிகாரம், பணம், ஆட்கள் சக்தியுடன் ஏற்படுத்த வேண்டும். மரம் வெட்டும் தேவை ஏற்பட்டால் அதனை ஆராய்ந்து இந்த ஆணையத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்.

நகர்ப்புற மரங்களை காப்பதற்கான சிறப்பு சட்டத்தை (Urban Areas Preservation of Trees Act) உடனடியாக இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பசுமைத் தாயகம் அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் இரயிவே துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பசுமைத் தாயகம் மாநில செயலாளர் இர. அருள், வழக்கறிஞர் கே. பாலு, பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளர்கள் ச.க. சங்கர், வி. இராதாகிருஷ்ணன் மற்றும் மு. ஜெயராமன், குரோம்பேட்டை நா. கண்ணன், அ. முத்துக்குமார், வடபழனி கார்த்திக் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தெற்கு ரெயில்வே விளக்கமும் பசுமைத் தாயகத்தின் கோரிக்கையும்.

‘சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நடப்படும். சில மரங்கள் ரயில்வே வளாகத்தில் வேறு இடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்படும்’ – என்று தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று மேலோட்டமாக கூறாமல், விரிவான மாற்று திட்டத்தை தெற்கு ரெயில்வே வெளியிட வேண்டும். ‘மரங்கள் எந்த இடத்தில் எப்போது நடப்படும். அவை எவ்வளவு நாட்கள் பராமரிக்கப்படும். இடம் மாற்றி நடப்படும் மரங்கள் எந்த இடத்தில் நடப்படும். இப்பணிகளுக்கான ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு, பொறுப்பான அதிகாரிகள் யார்’ – என்பன உள்ளிட்ட விவரங்களுடன் மாற்றுத் திட்டத்தை வெளியிட வேண்டும். அதுவரை மரம் வெட்டும் திட்டத்தை தெற்கு ரயில்வே நிறுத்தி வைக்க வேண்டும் என பசுமைத் தாயகம் வலியுறுத்துகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.