கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற உத்தரவிட்ட சீன அரசு! – என்ன காரணம்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ஊடக நிறுவனங்கள் தங்கள் செய்தியாளர்கள் நான்கு பேரை, சீனாவுக்கு செய்தி சேகரிப்பு பணிகளுக்காக அனுப்பிவைத்திருந்தன. இதில் கடந்த ஏப்ரலில், பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தி இந்து நாளிதழின் இரண்டு பத்திரிகையாளர்களின் விசாவைப் புதுப்பிக்க சீனா அரசு மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் உள்ளிட்ட முன்று நிருபர்கள் சீனாவிலிருந்து வெளியேறிவிட்டனர்.

சீனா அதிபர் – பிரதமர் மோடி

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிருபர் மட்டும் அங்கேயே இருந்தார். இதற்கிடையே இறுதியாக சீனாவில் இருந்த கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும், இந்த மாத இறுதிக்குள் சீனாவிலிருந்து வெளியேறுமாறு அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக, ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்தியாவில் ஒரு சீனப் பத்திரிகையாளர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.

அவரும் தன்னுடைய விசா புதுப்பித்தலுக்காகக் காத்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி, சைனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய நிறுவனங்களின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கான விசா புதுப்பித்தல் விண்ணப்பங்களை இந்திய அரசு மறுத்துவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.

சீன ஊடகவியலாளர்கள் இந்தியாவில் எந்தவிதப் பிரச்னையும் இன்றி செயல்படும் நிலையில், சீனாவிலுள்ள இந்திய ஊடகவியலாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதனால் இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.

2020-ல் இந்தியா சீனா எல்லையில் நடந்த சண்டையின் காரணமாக சீனா – இந்தியா இடையேயான உறவு பதற்றமாகவே தொடர்கிறது. ஆனால், சீனா அரசு அந்தப் பிரச்னையைப் புறந்தள்ளி, வர்த்தக உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க முயன்றாலும், எல்லைப் பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்தியா – சீனா இடையேயான உறவு இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

இந்த நிலையில், சீனாவிலிருந்து இந்தியப் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படும் விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.