பண மோசடி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்… பாஜக பிரமுகர் `மிளகாய்ப்பொடி' வெங்கடேசன் கைது!

போலி ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டதாக ஆவடி காவல் ஆணையரகம் (CCB) பதிவுசெய்யப்பட்ட எப்ஃ.ஐ.ஆரின் அடிப்படையில், பா.ஜ.க பிரமுகர் கே.வி.ஆர் என்று அழைக்கப்படும் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மற்றொரு எஃப்.ஐ.ஆரில், போலி ஆவணங்கள் தயாரித்து 18 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததற்காகவும், கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதற்காகவும், கே.ஆர்.வெங்கடேசனும், ஸ்ரீனிவாசன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதோடு A1-னான கே.ஆர்.வெங்கடேசனிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும், A2-வான ஸ்ரீனிவாசனிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக கே.ஆர்.வெங்கடேசன் மீது ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 40-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

பாஜக தலைவர்களுடன் வெங்கடேசன்

இந்தக் கைது தொடர்பாக ஆவடி காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, “M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் கண்ணன் என்பவர் கொடுத்தப் புகாரில், ‘நான் 2000-ம் ஆண்டு முதல் கண்ணன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கட்டடம் கட்ட தேவையான பொருள்களான செங்கல், மணல், ஜல்லிக்கற்கள் போன்றவற்றை விற்பனைசெய்யும் தொழிலைச் செய்து வருகிறேன். 2009-ம் ஆண்டு ஸ்ரீனிவாசனும் அவர் மனைவி பவானியும் என்னை அணுகி, நாங்கள் ஒரே வகையான தொழில் செய்து வருவதால், அவர்கள் நடத்திவரும் M/s SMG என்டர்பிரைசஸ் & இன்ஜினீயரிங் மூலம் கான்ட்ராக்ட் தொழிலிலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைகள் சொல்லி என்னை முதலீடு செய்ய தூண்டினார்கள்.       

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

முதல் முதலீடாக ரூபாய் 30 லட்சத்தில் தொடங்கினேன். ஸ்ரீனிவாசன் பல பிரச்னையுள்ள நிலங்களிலும், கட்டடம் கட்டத் தேவையான தளவாடங்களிலும் முதலீடு செய்தார். 2013-ம் ஆண்டு ஸ்ரீனிவாசன் பாடியநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்த, K.R.V (எ) வெங்கடேசன் என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். ஸ்ரீனிவாசனிடம் முதலீடாக பல தருணங்களில் 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 18 கோடி ரூபாய் முதலீடு செய்தார். தனது நிறுவனத்துக்கு வங்கியில் மதிப்பு (CIBIL SCORE) அதிகமாக்கவும், தனது பெயரிலும் சொத்து பத்திரங்கள் இருந்தால் வங்கியில் கடன் பெற முடியும் என்றும், இது போல் பிரச்னையுள்ள இடங்களில் முதலீடு செய்யும்போது அதை சரி செய்து சில வருடங்கள் கழித்து நல்ல விலையில் விற்று அதிக லாபம் ஈட்டலாம். அப்படி ஒரு வேளை தொழிலில் நட்டம் ஏற்பட்டால் முதலீடு செய்த நிலங்களை விற்றாவது எனது முதலீட்டை திருப்பி அளிப்பதாக உறுதியளித்தார்.        

எனவே இருவர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்தின் அனைத்து அசல் ஆவணங்களையும் வங்கியில் கொடுத்து Memorandum of Deposit of Title Deeds பத்திரம் பதிவுசெய்து, கடன் பெற சம்மதித்து நானும் என்னுடைய மனையியும் Guarantor கையெழுத்து போட்டோம். அதன் பேரில் ஸ்ரீனிவாசன் ரூபாய் 3,78,00,000-ஐ தனது நிறுவன வங்கிக் கணக்கில் பெற்றிருக்கிறார்.     

கைது

        பின்னர் இது குறித்த ஆவணங்களைக் கேட்டபோது சீனிவாசன் தர மறுத்தார். கடன் பெற்ற சென்னை அண்ணா நகரிலுள்ள வங்கிக்கு 26.12.2022 அன்று நேரில் சென்று விசாரித்தபோது, ஸ்ரீனிவாசனும் அவருடைய மனைவியும், நானும் என்னுடைய மனைவியும் உண்மையாக கையொப்பமிட்டதைப்போல் போலியாகக் கையொப்பமிட்டு, ஆள்மாறாட்டமும் செய்து அதே வங்கியில் மீண்டும் ரூபாய் 3 கோடிக்கும் அதிகமாக கடன்பெற்றிருக்கின்றனர் என்பது தெரியவந்தது.      

21.05.2023-ம் தேதி ஸ்ரீனிவாசன் என்னிடம் பணத்தைத் திருப்பிக் கொடுப்பது பற்றி பேச வேண்டும் என்று வீட்டுக்கு வரச்சொல்லி போன் மூலம் தெரிவித்தார். நானும் அவரது வீட்டுக்குக் காலை சுமார் 10:30 மணியளவில் சசென்றேன். அங்கு நடந்த வாக்குவாதத்தின்போது, வெங்கடேசன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை ஸ்ரீனிவாசனிடம் கொடுத்து, இதைக்காட்டி அவனுக்குப் புரியவை என்று சொன்னார். அதை வாங்கிய ஸ்ரீனிவாசன், என் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, சொன்னதைக் கேட்டா உயிரோடு இருப்ப… இல்லனா பணம் வாங்க நீ இருக்க மாட்ட, என்று மிரட்டினார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினோம். தேடுதல் வேட்டை நடத்தி, K.R.வெங்கடேசன், ஸ்ரீனிவாசன் ஆகியோரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்த மூன்று கைத்துப்பாக்கள், தோட்டாக்களைப் பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினோம். அரசியல் செல்வாக்கு, பணபலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு காவல்துறை சட்டபூர்வமான பாடம் புகட்டும்” என்றனர்.

அண்ணாமலையுடன் வெங்கடேசன்

இது தொடர்பாக பா.ஜ.க-வில் சிலரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “கட்டப்பஞ்சாயத்து, செம்மரக் கடத்தல் எனக் குற்றப்பிண்ணனி உள்ள கே.ஆர்.வெங்கடேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணியில் இருந்தவர். இவர் திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளுடன் வந்து கட்சியில் இணைந்தார். அவருக்கு ஓ.பி.சி அணியில் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இவரைப் பற்றி முழு தகவல் தெரிந்த உடனே, பொறுப்பு வழங்கப்பட்ட பத்து நிமிடங்களில் அவரது பொறுப்பு பறிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் சில நிர்வாகிகளுடன் இருக்கும் நட்பால், மத்திய அமைச்சர்கள் யாராவது சென்னைக்கு வந்தால் அவர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். சி.பி.ஆர் ஆளுநராகப் பதவி ஏற்றபோது இவருடை செலவில் பலரை ஜார்கண்டுக்கு ஃபிளைட் டிக்கெட் போட்டு அழைத்துச் சென்று வந்தார். பணம் என்கிற ஒரே காரணத்துக்காக இது போன்ற சமூக விரோதிகளை கட்சியில் ஊக்குவிப்பது ஆரோக்கியமான விஷயமில்லை” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.