WTC இறுதிப் போட்டியில் டீம் இந்தியாவின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள்..!

IND vs AUS: WTC இறுதி 2023 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்து முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் ஏமாற்றமளித்தனர். இந்தப் போட்டியில் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதனை இலக்கை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்திய அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் 

இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் போனது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 13, 18 என இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மாவும் பேட்டிங் ஒழுங்காக விளையாடவில்லை. முதல் இன்னிங்சில் 15 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 43 ரன்களும் எடுத்தார். சேதேஷ்வர் புஜாராவும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலி மட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 49 ரன்கள் எடுத்தார். 

தோல்விக்கு காரணம் என்ன?

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற சில நாட்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் முழுமையான பயிற்சியை கூட எடுக்கவில்லை. ஐபிஎல் முடிந்தவுடன் நேரடியாக இங்கிலாந்து சென்றவர்கள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்கினர். ஓய்வு மற்றும் முறையான பயிற்சி இல்லாமை ஆகியவை இந்திய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விளையாடிய விதத்திலேயே தெரிந்தது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

அஸ்வின் நீக்கம் பின்னடைவு

இந்த போட்டியில் உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை பிளேயிங்-11ல் சேர்க்கவில்லை கேப்டன் ரோஹித் சர்மா. அவரது முடிவை பல மூத்த கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்துள்ளனர். இந்தப் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும் என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கவில்லை, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை பார்க்கும்போது அஸ்வின் இருந்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் பலமாக இருந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.