காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு – ரூ.75.95 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம்

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடப்பு ஆண்டில் ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டில் அணையில் போதிய தண்ணீர் இருப்பதால், உரிய காலமான ஜூன் 12-ம்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

சேலத்தில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்த முதல்வர், மேட்டூர் அணையில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதான மதகுகளை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் இதுவரை 23.54 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 1.50 லட்சம் இலவச விவசாய மின்இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.61.90 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதில், 4.90 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2022-ல் மேட்டூர் அணையில் இருந்து முன்னதாகவே, அதாவது மே 24-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ரூ.61.12 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 48 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஆண்டில் குறுவை நெல் சாகுபடி 5.36 லட்சம் ஏக்கரை கடந்து, 12.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் ரூ.90 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

தற்போது அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் கடைகளிலும் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான குறைந்த நாள் வயதுடைய நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

நிலத்தடி நீரை பயன்படுத்தி இதுவரை 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் நடவு பணி முடிந்துள்ளது. சமுதாய நாற்றங்கால் அமைத்து, காவிரி நதிநீர் வந்தவுடன், நடவுபணியை உடனே தொடங்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்று, 3-வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நடப்பு ஆண்டில் ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவிக்கிறேன். இத்திட்டத்தின்கீழ், ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.50 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், 1.24 லட்சம் ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானியத்திலும், 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பும், 6,250 ஏக்கரில் பசுந்தாள் விதைகளும், 747 பவர் டில்லர்களும், 15 பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்யப்படும். குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தால், நடப்பு ஆண்டில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,எம்ஆர்கே பன்னீர்செல்வம், மதிவேந்தன், எம்.பி.க்கள் கவுதம் சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், செந்தில்குமார், சின்ராஜ், ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சதாசிவம், நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்சார உற்பத்தி தொடக்கம்: மேட்டூர் அணையில் இருந்துமுதல்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலையில் 10 ஆயிரம் கனஅடியாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 2024 ஜன.28-ம் தேதி வரை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், 7 கதவணைகளில் மின் உற்பத்தி தொடங்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.