மாஞ்சோலை: அதிகாரம் மட்டுமல்ல, அட்டைகளும் இரக்கம் காட்டாத தொழிலாளர் வாழ்வு|1349/2 எனும் நான்|பகுதி-14

மலைக்காடுகளில் `அட்டை’ (Leech) என்றொரு உயிரினம் இருக்கும். மழை பெய்துவிட்டால் போதும், எங்கிருந்துதான் உற்பத்தியாகி வருகிறது என்பதே தெரியாது. தவறாது வந்துவிடும். கருப்பு வண்ணத்தில், பிடித்து இழுப்பதற்கு எளிதில் சாத்தியமில்லாத, சுமார் ஒரு இஞ்ச் நீளத்தில் சிறியதாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.

அட்டை

அது பூச்சி இனமென்றும், மண்புழு போன்று இருப்பதால் புழு இனத்தைச்சேர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. இலை, தளைகளைக்கொண்டு இயற்கையாக உருவாக்கப்படும் கம்போஸ்ட் உரம் போட்ட காடுகளில், வழக்கத்துக்கு மாறாக கை சுண்டு விரல் அளவுக்கு பெரிய பெரிய அட்டை இருக்கும்.

அடர்ந்த வனமான குதிரைவெட்டி, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி பகுதிகளில் அதிகமாக காணப்பட்டாலும், தரைப்பகுதி போல பருவநிலை கொண்டதுடன் அடிக்கடி வெயிலடிக்கும் மாஞ்சோலையில் அட்டை கொஞ்சம் குறைவு. Hirudinea என்ற அறிவியல் பெயர் கொண்ட அட்டையை வைத்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாய் அளிக்கப்பட்டு வரும் Leech Therapy எனும் பாரம்பரிய சிகிச்சைமுறை பிரபல்யமானது.

காயம், நோய் காரணமாக உடலில் நெடுநாட்களாய் கட்டியிருக்கும் அசுத்த இரத்தம் இருக்குமிடத்தில் அட்டையைக் கடிக்கவைத்து அதனை வெளியேற்றி சுகப்படுத்தும் வழிமுறை அது.

2600 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் `சுஸ்ருத சம்ஹிதை’ எனும் சமஸ்கிருத மருத்துவ நூலிலும், எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகளிலும் அட்டைக்கடி சிகிச்சை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மனித இரத்தம் தான் அட்டையின் உணவு. உடல் சூடு/ வியர்வையை உணர்ந்து நம்மீது ஏறிவிடும். தேயிலைக்காட்டில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் கால் விரல்களுக்கு இடையிலும், தலை, இமை, மூக்கு, வாய், அக்குள், கை, வயிறு, முதுகு, பிறப்புறுப்பு, ஆசனவாய் என உடம்பின் எல்லா பகுதிகளிலும் ஏறிக்கொள்ளும்.

கேரளாவில் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் அழைத்துச்செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அட்டையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முட்டிவரை நீளமுள்ள காலுறை வழங்கப்படுகிறது. ஆனால் அதனை தொழிலாளர்கள் நாள் முழுக்க அணிந்துகொண்டு வேலைபார்ப்பது சாத்தியமற்றது.

கால்களில் ஏறிய அட்டை

மழைக்காலத்திலும், குளிரில் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் உணர்வுகள் குறைந்து மரத்துப்போகும். அவ்வாறு மரத்துப்போன இடங்களில் தேயிலைக்குச்சி குத்தி இரத்தமே வந்தாலும் உடனடியாக உணரமுடியாது. தேயிலைக்காட்டுக்குள் இருந்து நடைபாதைக்கு வந்து நிற்கும் போதுதான் இரத்தம் வருவதைக் கண்டுணர முடியும். பெரும்பாலும் உணர்வு வந்த பிறகு வலி ஏற்படுவதின் மூலமாகவே காயத்தைக் காணமுடியும். ஒன்றல்ல இரண்டல்ல கொத்துக்கொத்தாக அட்டைகள் ஏறி உட்கார்ந்து கொண்டு நம் இரத்தத்தை குடித்துக்கொண்டிருக்கும். உடம்பிலிருந்து அட்டையை எளிதில் பிரிக்கமுடியாது என்பதால்தான் `அட்டை மாதிரி ஒட்டிக்கொள்வான்’ என்ற உவமை உருவானது.

சாதாரணமாக இருக்கும் பலூன், காற்று நிரம்பிய பிறகு பெரிதாக ஆவதைப்போல, மிகவும் சிறிதாக இருக்கும் அட்டை, இரத்தத்தைக் குடித்தபிறகு, நன்றாக ஊதிப் பெருத்துவிடும். உடம்பில் ஒட்டிக்கொண்டால் சுமார் இருபது நிமிடங்கள் வரையிலும் இரத்தத்தை உறிஞ்சும். போதுமான இரத்தத்தைக் குடித்தபிறகு, அதற்கு மேல் சேமித்துவைக்க இடமில்லாத நிலையில், அதுவே போதுமென்று நினைத்த பிறகுதான் தானாக விழும்.

ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக்காட்டிலும் சுமார் எட்டு மடங்கு இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது அட்டை என்கிறது ஆய்வு.

அட்டை கடித்துக்கொண்டிருப்பதை ஒருவேளை உணர்ந்தாலும், அதனைப் பிடுங்கிப்போட்ட பிறகு தான் வேலையைத் தொடர்வதாக இருந்தால், நாள் முழுக்க ஐந்து கிலோ தேயிலையைக்கூட பறிக்கமுடியாது. பறித்த தேயிலையை எடைபோட நிறுவைக்களத்திற்கு வரும்போதே பெரும்பாலும் அட்டைகளைப் பிடுங்கிப்போடுவார்கள்.

அட்டையைப் பிடுங்கிய பிறகு அவை கடித்த இடத்திலிருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டே இருக்கும். வழக்கமாக காற்று பட்டவுடன் சீக்கிரமாகக் காய்ந்து உறைந்துபோய் அதன்பிறகு வடியாமல் நின்றுபோகும் தன்மைகொண்டது இரத்தம். ஆனால், அட்டை கடிக்கும்போது, அதன் உமிழ்நீர் இரத்தத்துடன் கலக்கும். அதன் உமிழ்நீரில் சுரக்கும் `ஹிருடின்’ எனும் திரவம், இரத்தத்தை உறைந்து போகவிடாமல் தொடர்ந்து திரவமாகவே இருக்கச்செய்வதன் மூலம் எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.

மாஞ்சோலை – விறகு சுமக்கும் தொழிலாளர்

இரத்தம் ஒழுகிக்கொண்டே இருப்பதைத் தடுக்க மருந்து எதுவுமிருக்காது. அதனால் ஆண்கள் பீடித்தாள்களை கிழித்து ஒட்டிக்கொள்வார்கள். புகையிலைத் தூளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழப்பி புட்டியில் வைத்துக்கொள்வார்கள். பெரும்பாலானோர், பெண்கள் புட்டியில் வைத்திருக்கும் பட்டணம் பொடி, எண்ணைய், சோப்பு, டெட்டால், உப்பு போன்றவைகளைச் சேர்த்த கலவைவையை இரத்தம் வரும் இடத்தில் தேய்த்துக்கொள்வார்கள். கல் உப்பைத் துணியில் கட்டி, அட்டை கடிக்கும் இடத்தில் வைத்துத் தேய்ப்பார்கள். சிறிது நேரத்திற்கு அந்த கலவை தாக்குப்பிடிக்கும். `ஹிருடின்’ வீரியம் குறைந்த பின்னர் வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் அதுவாக நின்றால்தான் உண்டு.

உடம்பில் புண் வந்த இடம், காயம்பட்ட இடம், குச்சி கிழிச்ச இடம், முந்தையநாள் அட்டை கடிச்ச இடங்களெல்லாம் அட்டைக்கு விருப்பமான இடங்கள். தனக்கான வாயில் திறந்தே இருக்கிறதே என பெரும் துள்ளலுடனும் அந்த இடங்களுக்கு விரைந்து இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்.

மழைக்காலங்களில் விறகு சேகரிக்கப் போனாலும், மாட்டுக்கு புல்லறுக்க போனாலும், காட்டில் வேறு எந்த வேலை பார்த்தாலும் அட்டைக்கடியிலிருந்து தப்பிக்க முடியாது. அதற்கு சிறிய விதிவிலக்கு தேயிலை தொழிற்சாலையில் வேலைபார்ப்பது. ஆனால் அது எல்லோருக்கும் வாய்க்காது. புல்லை சுமக்கையிலும், விறகுக்கட்டு கொண்டுவரும் போதும் அதன் வாயிலாக ஏறி தலையில் கடிக்கும் அட்டையை உடனே பறித்தெரிய முடியாது. வீட்டுக்கு வந்த பிறகுதான் ஒவ்வொன்றாய் பிடுங்கமுடியும். விறகு கொண்டுவந்த பிறகு அப்பா தனது கால் விரல் இடுக்குகளிலிருந்து கொத்துகொத்தாய் அட்டைகளை பிடுங்கிப்போடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

மதிய உணவு இடைவேளையில் தொழிலாளர்கள்

சிலசமயம் கடிக்கும்போது வலி பொறுக்க முடியாமல், அட்டைகளை பிடுங்கிப் போட்டு அவற்றின் மீது கல் உப்பை போடுவார்கள். அப்போது இரத்தம் குடித்து உப்பிப்போய் இருக்கும் அட்டைகள் வெடித்துச்சிதறும். பெரும்பாலும் உடம்பில் ஒட்டிகொண்டிருக்கும் அட்டைகளைப் பிடுங்கி அடுப்புக்குள் போடுவார்கள்.

அட்டைக்கடிக்குப் பயந்து, ஐயா என அழைக்கப்படும் காட்டு அதிகாரிகள், மழை பெய்யும் காலங்களில், தேயிலைக்காட்டிற்குள் மறந்தும் கூட அடியெடுத்து வைக்கமாட்டார்கள். ஐயாமார்களே நுழையாத போது, அந்த சமயங்களில் எஸ்டேட் மேலாளர்கள் மட்டும் தேயிலைக்காட்டுக்குள் நுழைந்து விடவா போகிறார்கள்?. ஷூவுக்குள் ஏறிவிடும் என்பதால் சாலையிலேயே நின்று கொள்வார்கள். சிலசமயம் வண்டியில் இருந்து இறங்கக்கூட மாட்டார்கள். கங்காணிகளை மாத்திரம் காட்டுக்குள் அனுப்பி வைப்பார்கள்.

வேலை நேரங்களில் ஆண் தொழிலாளர்கள், கங்காணிகள், காட்டு அதிகாரிகள், மேலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தொடை வரை மட்டுமே நீளமிருக்கும் கால்சட்டையை அணிந்து இருப்பார்கள். எவ்வளவு குளிர் இருந்தாலும் மழை பெய்தாலும் துவக்க காலங்களில் இருந்தே அதுதான் அவர்களது உடை. அதிகமான இரத்தத்தை உறிஞ்சிவிடுவதற்கு முன்பாக உடனடியாகக் கண்டுபிடித்து, அட்டையைப் பிடிங்கி தூரப்போட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த உடையை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல.

பாவம் பெண் தொழிலாளர்கள். ஆண்களைப்போல வாய்ப்பில்லாத உடைகள். சேலை அட்டைகள் ஏற ஏதுவாக இருக்கும். முடிந்தவரைக்கும் அதிலிருந்து தப்பிக்க, வேலை நேரத்தில் காட்டுக்குள் நுழையுமுன்பாக தங்களின் உடைகளை கால்முட்டு வரைக்கும் மடித்து, கட்டிக்கொள்வார்கள். எவ்வளவுதான் பாதுகாப்பாய் இருந்தாலும், சில சமயங்களில் அட்டை கடித்து தொழிலாளர்களின் பிறப்புறுப்பு வீங்கிவிடும். நரம்பில் கடித்தால் அவ்வளவுதான். இரத்தம் எளிதில் நிற்காது. வெளியிலும் சொல்ல முடியாது. துடைத்துக்கொண்டே வேலைபார்த்தாக வேண்டும்.

சேலையைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் பெண்கள்

மழைநேர தேயிலைக்காட்டில் அட்டைக்கடியில் குருதி வடியாத தொழிலாளியை காணக்கிட்டாது. வேலைத்தளத்தில் ஒருமுறை, கையால் எடுக்கமுடியாத அளவுக்கு தொழிலாளி ஒருவரின் மூக்குக்குள் போய் இருந்துகொண்டு வெளியே வரமாட்டேன் என அடம் பிடித்தது அட்டை. அவரை உடனடியாக எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டுபோய் வெளியே எடுத்தார்கள்.

தேயிலைக்காட்டில் வேலை பார்த்துவிட்டு, அங்கிருந்தே சிலசமயம் பேருந்தில் ஏறுவதால், அவர்கள் மேல் ஒட்டியிருக்கும் அட்டை பேருந்துக்குள் ஏறிவிடும். ஒருமுறை அவ்வாறு மூன்றுமணி நேரம் பயணித்து கல்லிடையில் வீட்டுக்கு சாமான் வாங்கிக்கொண்டிருக்கும் போது தொழிலாளி ஒருவரின் தலையில் அட்டை அப்போதும் இருந்ததை உணர்ந்து நடுங்கிப்போனார். அவரது தலைமுடிக்குள் இரத்தம் உறைந்து முடியெல்லாம் கட்டியாகி இருந்தது.

தேயிலைக்காட்டையும், அட்டையையும் பிரிக்கவே முடியாது. அட்டையால் உயிருக்கு யாதொரு பாதிப்புமில்லை என்றாலும் அதனை புதிதாய் பார்ப்பவர்களுக்கு அச்சமும், பார்த்து பழகியவர்களுக்கு அறுவறுப்பும் உண்டு செய்யும் ஒரு உயிரினம்.

“பெரும்பாலும் காட்ல வச்சிதான் மத்தியான சோற சாப்பிடுவோம். சாப்பாட்டு தூக்குச் சட்டி / டிஃபன் பாக்ஸ, காலைல வேலக்கி வந்ததும், நிறுவக்களத்தில / தேயில மூடுகள்லயும் வச்சிருவோம். மத்தியானம் சாப்பாட்டு பாத்திரத்த தெறக்கும்போது மூடி மேலல்லாம் அட்டை இருக்கும். அதிலயும் குஞ்சி அட்டைங்க அதிகமாக இருக்கும். பிடுங்கிப்போடவும் முடியாது. என்னதான் பசி கொன்னாலும், அட்டைய பாத்த பின்னாடி சாப்பிடவே தோனாது. பலநாள் சாப்பாட்ட தூரக்கொட்டிட்டு சாயங்காலம் வரைக்கும் பட்டினியா வேலபாத்திருக்கேன். என்ன செய்ய?! வேற வழியில்ல. இப்ப நெனச்சாலும் அறுவறுப்பா இருக்கு” என்று சொல்வார் அம்மா.

உணவு சாப்பிடும் தொழிலாளர்கள்

பொதுவாக, உடல் உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்கள், இரத்தம் சிந்தி பாடுபடுவதாக சொல்வதுண்டு. உருவகப்படுத்தி சொல்லப்படும் அந்த சொற்றொடர் அட்டைகளுக்கு மத்தியில் வேலைசெய்யும் தேயிலை தொழிலாளர்களுக்கு எல்லா அர்த்தத்திலும் பொருந்திப்போகிறது. அதிகாரமும் அட்டைகளும் ஒருபோதும் தெழிலாளர்களின் உதிரம் குடிக்க தயக்கம் கொள்வதே இல்லை. இரண்டையும் சரியான நேரத்தில் கண்டறிந்து சுதாரிப்பதே தெழிலாளர்களின் வழக்கமாகிறது.

படங்கள்: ஜெயராணி, ஃபிரடி விக்டர், மாஞ்சோலை செல்வகுமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.