சர்வதேசப் பாடசாலைகளைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் கல்வி அமைச்சில் ஒரு விசேட பிரிவை அமைக்க நடவடிக்கை..

இலங்கையில் தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்கவும் முன்மொழிவு

சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் தற்பொழுது காணப்படும் சட்டக் கட்டமைப்புகள் காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது புலப்பட்டது.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 2023.06.08 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இதில், இலங்கையில் காணப்படும் சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பிலும், அந்தப் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அதன் தரம் என்பவற்றை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் காணப்படாதா பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான அளவுகோல்கள் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் (National Education Commission) தயாரிக்கப்பட்டு வருவதாக இதன்போது புலப்பட்டது.

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி ஆலோசனை சேவையில் (In service Advisors) காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரினால் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆங்கில மொழி மூலமான உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. அதற்கமைய, மாணவர்களின் தொடர் கல்விக்கு இடையூறாக உள்ள இந்த ஆசிரியர் பற்றாக்குறையை போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவரினால் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடாத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் குறித்து குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், அந்த ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் குறித்து சமூகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பிலும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே சிறந்தது என கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு பரிந்துரைத்தது.

ஏனைய நாடுகளில் தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் (Teaching License) வழங்கப்பட்டு அந்தத் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன், இலங்கையிலும் அவ்வாறானதொரு முறையைப் பின்பற்றுவது பொருத்தமானது என குழு மேலும் பரிந்துரைத்தது.

எனவே, இவ்வாறானதொரு முறையைத் தயாரிப்பதில் உடனடி கவனம் செலுத்தி, தனியார் வகுப்பு ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு சட்டரீதியாக தொழில் அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ முதிதா பிரிஷாந்தி, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோரும், எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கௌரவ கே. காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல ஆகியோர் குழுத் தலைவரின் அனுமதிக்கு அமைய கலந்துகொண்டனர்.

அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் Association of International Schools of Sri Lanka (AISL) ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.