மயிலாடுதுறை: செயின் பறிப்பு… திருடனை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த பெண் காவலர்!

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை பணம்பள்ளி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார். அவரின் மனைவி ராஜகுமாரி (வயது 38). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் கடையின் வாசலுக்கு வந்தபோது மர்ம நபர் ஒருவர் ராஜகுமாரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தாலி செயினை படித்துவிட்டு ஓடியுள்ளார்.

பெண் தலைமை காவலர் கோப்பெருந்தேவி

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி கூச்சலிட்டுக்கொண்டே மர்மநபரை துரத்தியுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் வணிக வளாகம் வழியாக புகுந்து ஓடிய, மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸார் நேற்று மதியம் நகரம் முழுவதும் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் கூறைநாடு ரயில் நிலையம் சாலையில் நடந்து சென்ற நபரை கவனித்த மயிலாடுதுறை தனிப்பிரிவு தலைமை காவலர் கோப்பெருந்தேவி, அவரை அடையாளம் கண்டுபிடித்தார். உடனே அவரின் சட்டையை பிடித்துள்ளார். அப்போது கோப்பெருந்தேவியை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரின் சட்டையை பிடித்து, விடாமல் ‘இவன் திருடன் இவனை பிடிக்க உதவி செய்யுங்கள்’ என்று அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.

ரசாக்

அங்கிருந்து பொதுமக்கள் உடனே பெண் போலீஸாருக்கு உதவியாக மர்ம நபரை பிடித்துக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸார் அங்கு வந்து மர்மநபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் பட்டமங்கலத்தெருவில் ராஜகுமாரியிடம் 4 பவுன் தாலி செயினை பறித்து சென்றவர் தான் என்பதும், அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த நிசார் அலி மகன் ரசாக் ( 28) என்பதும், தற்போது மயிலாடுதுறை கூறைநாடு எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ரசாக்கிடமிருந்து 4 பவுன் தாலி செயினை மீட்ட போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண் போலீஸ் துணிந்து தன்னந்தனியாக பொதுமக்கள் உதவியுடன் திருடனை பிடித்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.