Mari selvaraj – தேவர் மகன் ஏற்படுத்திய வலி.. கமலை வைத்துக்கொண்டே “சம்பவம் செய்த” மாரி செல்வராஜ்

சென்னை: Mari selvaraj (மாரி செல்வராஜ்) மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் ஹாசனை வைத்துக்கொண்டு தேவர் மகன் பற்றி மாரி செல்வராஜ் பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ்,லால் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். முதல் இரண்டு படங்களிலும் சாதிய அட்டூழியங்களையும், அதிகாரவர்க்கத்தினரின் கோர முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய மாரி மாமன்னனில் என்ன மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்திருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் கடந்த 16ஆம் தேதி வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது எளிய மக்களிலிருந்து ஒருவர் அதிகாரத்திற்கு வந்தால் என்ன ஆகும் என்பதுதான் கதைக்களம் என்பதை உணர்ந்துகொள்ள முடிவதாக ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் அட்டகாசமாக அமைந்துள்ளன.

ஆடியோ வெளியீட்டு விழா: இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாமன்னன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் கமல் ஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, ஹெச்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கு கமல் ஹாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வடிவேலு பேசியது ரசிக்கும்படியாக இருந்தது. இந்தச் சூழலில் விழாவில் மாரி செல்வராஜின் பேச்சில் அனல் பறந்தது.

தேவர் மகனுக்கு உள்குத்து: இதற்கிடையே கமல் ஹாசன் எழுத்தில், நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் சாதிய பெருமையை அப்பட்டமாக பேசியது. அது சாதியத்திற்கு எதிரான படம் என்று ஒரு சதவீதம்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதிக்க சாதியினரை அந்தப் படம் மேற்கொண்டு தூண்டிவிடத்தான் செய்தது என பல வருடங்களாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலை வைத்துக்கொண்டே மாரி செல்வராஜ் பேசியதை பார்த்த ரசிகர்கள் மாரி செல்வராஜ் நல்ல சம்பவம் செய்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

மாரி செல்வராஜ் பேச்சு: விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “மாமன்னன் உருவாவதற்கு தேவர் மகன் ஒரு காரணம். தேவர் மகன் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. அந்த நாட்களை கடக்க முடியாமல் ஒரு சினிமாவாக சமூகத்தை அது எப்படி புரட்டி போடுகிறது. ஒரு சினிமா மொழியாக வேறு ஒரு இடத்தில் அது இருக்கிறது. மறுபக்கம் வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டுக்குள்ளும் பின்னி, பிணைந்து சரியா தவறா உழன்று கொண்டிருந்தவன் நான்.

மாஸ்டர் ஸ்ட்ரோக்தான் ஆனாலும் வலி: தேவர் மகன் படம் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். எல்லா இயக்குநர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். நானும் பரியேறும் பெருமாள் எடுக்கும் முன்பும், கர்ணன் எடுக்கும் முன்பும் தேவர் மகன் படத்தை பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ஆனால் தேவர் மகன் படம் எனக்கு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கிய படம். நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி நான் புரிந்துகொள்வது. இந்தப் படம் சரியா, தப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு வலி.

இசக்கிதான் மாமன்னன்: அந்த தேவர் மகன் உலகத்துக்குள் பெரிய தேவர் இருக்கிறார். சின்ன தேவர் இருக்கிறார். எல்லோரும் இருக்கிறார்கள். இதற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருப்பார் என முடிவு செய்து என் அப்பாவுக்காக பண்ண படம்தான் மாமன்னன். கமல் ஹாசன் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவரால் பண்ண முடிகிறது. அது இத்தனை காலம் தாண்டியும் ஸ்க்ரீன் ப்ளேவின் மாஸ்டராக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தேவர் மகனில் இருக்கும் இசக்கிதான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் மாமன்னன் படம்” என்றார்.

இதனிடையே கமல்ஹாசன் முன்னிலையில் மாரி செல்வராஜ் இவ்வாறு பேசியதை கமல் ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பதை அவர்களது சமூக வலைதள பதிவுகள் காண்பிக்கின்றன. ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ரசிகர்களும் மாரி செல்வராஜ், தேவர் மகன் திரைப்படத்தை பாராட்டுகிறாரா அல்லது திட்டுகிறாரா என்று தெரியாமல், கைதட்டுவதா வேண்டாமா என்று யோசித்து யோசித்து கைதட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.