உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது

உப்பள்ளி:

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி

கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக பெரிய மாநகராட்சியாக இருப்பது உப்பள்ளி-தார்வார் ஆகும். இரட்டை மாநகரம் என்றழைக்கப்படும் உப்பள்ளி-தார்வார், வடகர்நாடகத்தின் தலைநகர் என்றால் மிகையல்ல. உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் மொத்தம் 82 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் தார்வாரில் 28 வார்டுகளிலும், உப்பள்ளியில் 54 வார்டுகளும் உள்ளன. இதில் பா.ஜனதா 39 வார்டுகளிலும், காங்கிரஸ் 33 வார்டுகளிலும், சுயேச்சைகள் 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு வார்டில் வெற்றி வாகை சூடி உள்ளது.

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை கைப்பற்ற 42 இடங்கள் தேவை. கடந்த முறை சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜனதா உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை கைப்பற்றியது. பா.ஜனதாவின் ஈரேஷ் அஞ்சட்டகேரி மேயராக இருந்தார்.

மேயர் தேர்தல்

இந்த நிலையில் அவரது பதவி காலம் முடிவடைந்த நிலையில், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிக்கு 20-ந்தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை கைப்பற்ற ஆளும் காங்கிரஸ் முனைப்பு காட்டி வந்தது. இதனால் மந்திரி சந்தோஷ் லாட், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், வினய் குல்கர்னி ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

முன்னதாக கட்சி தாவலில் இருந்து தங்கள் உறுப்பினர்களை காப்பாற்ற பா.ஜனதா கட்சி தங்கள் கட்சியின் உறுப்பினர்களை ரெசார்ட்டில் தங்க வைத்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தல் நேற்று நடந்தது.

பா.ஜனதா கைப்பற்றியது

இதில் பா.ஜனதா சார்பில் மேயர் பதவிக்கு வீணா பரத்வாட், துணை மேயர் பதவிக்கு சதீஷ் அனகல்லும் காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு சுவர்ணாவும், துணை மேயர் பதவிக்கு ராஜீவ் ஆகியோரும் போட்டியிட்டனர். காலை 8 மணிக்கு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் கைகளை உயர்த்துவதன் மூலம் மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பா.ஜனதாவை சேர்ந்த வீணா பரத்வாட்டுக்கும், சதீஷ் அனகல்லுக்கும் 46 உறுப்பினர்கள் கைகளை உயர்த்தினர். இதனால் அவர்கள் மேயர், துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி புதிய மேயராக வீணா பரத்வாட்டும், துணை மேயராக சதீஷ் அனகல்லும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர்களுக்கு உறுப்பினர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றி உள்ளது.

முயற்சி தோல்வி

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை கைப்பற்ற ஜெகதீஷ் ஷெட்டர், சந்தோஷ் லாட், வினய் குல்கர்னி ஆகியோரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை கைப்பற்றியதால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.