சர்வதேச அளவில் அதிகரிக்கும் வெள்ளியின் தேவை… ரிசர்வ் வங்கி வெள்ளிக் கடனை பரிசீலிக்குமா?

தங்கம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது நகைக் கடன் தான். அவசர தேவைக்கு வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல வங்கிகளில் டெபாசிட்டும் செய்து கொள்ளலாம். ஆனால் தங்கத்தை அடுத்து முக்கிய ஆபரணமாக பார்க்கப்படும் வெள்ளிக்கு அப்படி ஏதும் வாய்ப்புகள் பெரிதாக இல்லை.

தங்கம், வெள்ளி

வெள்ளிக் கடன்..!

இந்நிலையில் தான் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வெள்ளி கடன் குறித்தான ஒரு கொள்கையை கட்டமைக்க கோரிக்கை வைத்துள்ளன. இது கடன் வாங்குபவர்களுக்கு மிக பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கு இது பெரும் உதவிகரமாகவும் இருக்கலாம். இது பொதுமக்கள் தவிர, சில்லறை வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என பலருக்கும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி ஏற்றுமதியானது சுமார் 16% அதிகரித்துள்ளது என தரவுகள் சுட்டி காட்டுகின்றன. இதற்கிடையில் தான் நகை உற்பத்தியாளர்கள் வங்கிகளிடம் வெள்ளி மீதான கடன் பற்றி அணுகுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் வங்கிகள், ரிசர்வ் வங்கியை அணுகி உள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து வங்கிகள் கடந்த மாதமே முடிவு எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை..!

தகவல்கள் படி, வெள்ளி ஏற்றுமதி கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயினை எட்டியுள்ள நிலையில், இத்துறையில் இன்னும் பெரும் தேவையானது உள்ளது. ஜெம் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சிலின் சமீபத்திய தரவின் படி, வெள்ளி ஏற்றுமதியானது 2022-23-ம் நிதியாண்டில் 16.02% அதிகரித்து, 23,492.71 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

RBI

இது முந்தைய ஆண்டில் 20,248.09 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கிடையில் வெள்ளி ஏற்றுமதியானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது. ஆக இந்த துறையில் கடன் தேவையும் மிக அதிகமாக உள்ளது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

 முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச அளவிலான வெள்ளியின் தேவை என்பது, 2022-ம் ஆண்டில் 16% அதிகரித்து, 1.21 பில்லியன் அவுன்ஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருக்கலாம் என சில்வர் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருந்தது. ஆக இப்படியான ஒரு பெரும் உலோகத்திற்கு தங்கத்தை போல பிணையமாக வைத்து கடன் வாங்க இயலவில்லை.

வெள்ளியும் விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றாக இருந்து வரும் சூழலில், இது தொழில் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய உலோகமாக இருந்து வருகிறது. எனினும் தங்கத்தை போன்று தங்கம் பணமாக்குதல் போன்ற திட்டங்கள், வெள்ளிக்கு இல்லை.

தங்கம் பணமாக்குதல்

2015 -ல் தொடங்கப்பட்ட தங்கம் பணமாக்குதல் திட்டம் (GMS) மூலம், முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் அதிகப்படியான, தங்கத்தின் மீது வட்டியைப் பெற உதவும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இது வங்கி நிலையான வைப்பு தொகை போன்றே செயல்படுகிறது. இங்கு வங்கிகளில் பணத்திற்கு பதிலாக தங்கத்தினை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் வங்கிகளுக்கும் பரிவர்த்தனை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களும் வீட்டில் வெறுமனே வைத்திருக்கும் தங்கத்தை வைத்து வட்டியும் பெற முடியும். இதில் பாதுகாப்பு என்பதும் கிடைக்கிறது.

ஆக தங்கம் பணமாக்குதல் திட்டம் போன்றே, வெள்ளிக்கும் ஒரு திட்டம் என சில முறையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என வங்கியாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளியின் அளிப்பு என்பது தொடர்ந்து பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. எனினும் கடந்த 2022ல் 300% பற்றாக்குறை ஏற்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. இது மேற்கொண்டு வெள்ளி விலையையும் அதிகரிக்கலாம். இப்படி ஒரு சூழலில் தான் இப்படியான ஒரு கோரிக்கையும் எழுந்துள்ளது.

வெள்ளி

குறிப்பாக வெள்ளியின் பயன்பாடானது மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சூழலில், இதன் தேவை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு ஒவ்வொரு மின்சார வாகனத்திலும் அதன் மாடலை பொறுத்து 25 கிராம் முதல் 50 கிராம் வரையில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. ஆக இதுவே வெள்ளியின் விலையில் பெரும் தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெள்ளியின் மின் மற்றும் வெப்ப கடத்துத் திறன் என்பது பேட்டரிகளில் ஒரு சிறந்த முக்கிய மூலப் பொருளாக மாறியுள்ளது. இதில் நச்சுத் தன்மை என்பதும் இல்லை என்பதால், வெள்ளிக்கான தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம்.

 இது தவிர சோலார் பேனல்களிலும் வெள்ளியின் பயன்பாடானது உள்ளது. சோலாரின் தேவையும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. ஆக அப்படி இருக்கும் சூழலில் வெள்ளிக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளும், கட்டமைப்புகளும் அவசியமான ஒன்று தான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.