`10,000 வருடங்கள் பழைமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்!' – வடலூரில் ஆளுநர் ரவி பேச்சு

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். மாலை வடலூர் அருகில் இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி.

வள்ளலார் ஜெயந்தி விழா

10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்படைந்தேன். அடிப்படையில் உண்மை என்பது ஒரே பரமேஸ்வரன். அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி, கொடிகள் என அனைத்தும் ஒரே குடும்பம். இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடையும், தோற்றமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம்.

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலி. அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். 200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளானபோது தோன்றியவர்தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது. ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதும் புதியதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது.

வடலூரில் ஆளுநர் ரவி

இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக்கொண்டதில்லை. வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போதுதான், பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் ஆங்கிலேயருக்கு உதவி செய்தவர். 1852-ல் நியூயார்க் டைம்ஸ் என்றழைப்படும் பத்திரிகையில் இந்தியாவை பற்றி பல கட்டுரை எழுதினார்.

அதில் இந்தியாவில் சமூக கட்டமைப்பு இருக்கக் கூடாது, அதை குலைத்து விட வேண்டும் எனவும், இந்தியர்களுக்கு ஆற்றல், அறிவு கிடையாது, நாகரிகமற்றவர்கள். கீழான நாகரிகத்தை அழிக்க வேண்டும் என எழுதியுள்ளார். நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் எதிர்பார்த்தும், கவனித்துக்கொண்டும் இருக்கின்றனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும், இந்தியா வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்லும்போது `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் வார்த்தையை ஏற்போம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.