`20 நாள்களாக அறுந்துகிடந்ததா மின்கம்பி?' – அலட்சிய மின்துறை; பறிபோன இளைஞரின் உயிர்; நடவடிக்கை என்ன?

விழுப்புரம் மாவட்டத்தில், அறுந்து விழும் மின் கம்பிகளால் நிகழும் உயிரிழப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை மட்டும் மூன்று மனித உயிர்களும், ஒரு கால்நடையின் உயிரும் பரிதாபமாக பறிபோனது. இந்த நிலையில், “அறுந்துவிழும் மின்கம்பிகள்; அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்; அலட்சியத்தில் விழுப்புரம் மின்துறை!” எனும் தலைப்பில் விரிவான கட்டுரையை விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது.

அறுந்து விழும் மின்கம்பிகள்

அவ்வாறாக கெடார் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் கடந்த 1-ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அப்போது செல்வராஜ் என்பவரின் கரும்பு தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து மின்துறை ஊழியர்களுக்கு அந்தப் பகுதியினர் தகவல் தெரிவித்த நிலையிலும், மின்கம்பி சரி செய்யப்படாமல் இருந்து வந்ததாம். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணுபதி என்ற இளைஞர் நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருக்கிறார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்வேறு இடங்களில் அவரைத் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆனால் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியில் சிக்கி விஷ்ணுபதி உயிரிழந்துகிடப்பது நேற்றைய தினம் தெரியவந்திருக்கிறது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கெடார் போலீஸார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். மேலும், காட்டுப்பன்றி ஒன்றும் இவருக்கு முன்பாகவே அதே மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துகிடந்திருக்கிறது. இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்துகிடந்த பன்றியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர். 

காட்டுபன்றி

இது தொடர்பாக கெடார் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணுபதியின் குடும்பத்தார், “மின்சாரக்கம்பி அறுந்து 20 நாள்களுக்கு மேலாக அதே இடத்தில் கிடக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மின்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். கேட்கும்போதெல்லாம், இங்கு வேலை இருக்கிறது, அங்கு வேலை இருக்கிறது என்று சொன்னார்களே தவிர… இந்த மின்கம்பியைச் சரி செய்திருந்தால் இன்று ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த உயிரிழப்புக்கு இந்த மின்சாரத்துறையும், தமிழக அரசும் என்ன பதில் சொல்லும் எனத் தெரியவில்லை. எனவே இந்த மின்துறையில் ஒழுங்காகப் பணி செய்யாமலிருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், விஷ்ணுபதியின் உடலை வாங்க மாட்டோம்” என்றனர். 

அவர்களின் புகாரை ஏற்ற கெடார் போலீஸார், மின்சாரத்துறை ஊழியர்களான பாலு, மணிகண்டன், சரவணன் ஆகியோர்மீது 304/2 பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம்

`மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திர விஜய்யிடம் பேசினோம். “மின்கம்பி அறுந்து விழுந்து 20 நாள்களாகவெல்லாம் கிடந்திருக்காது. ஏனெனில், அதுபோன்று அறுந்து விழுந்தால் விபத்து ஏற்படும் என்பதால், அதிகாரிகள் கட்டாயம் சென்று சரிசெய்து விடுவார்கள். மூன்று நாள்களாக அந்தப் பகுதியில்தான் வேலை செய்து வந்திருக்கின்றனர். அங்கிருந்து யாரும் தகவல் சொல்லவில்லை. தகவல் தெரிந்திருந்தால் ஊழியர்கள் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள். இந்தச் சம்பவம் குறித்து துறைரீதியாகச் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மின்கம்பிகள் அறுந்து விழுவதைத் தடுப்பதற்காக, பழைய மின்கம்பிகளைக் கண்டறிந்து, புதிதாக மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.