ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம் – புலம்பும் முன்னாள் சிஎஸ்கே வீரர்

இந்திய அணியின் சீனியர் வீரரான கேதார் ஜாதவ் இந்திய அணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2020-வரை 73 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 42 ரன்கள் சராசரியுடன் 101 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிட்டத்தட்ட 1400 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதமும், ஆறு அரை சதமும் அடங்கும். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியவில்லை என்றாலும் தோனியின் தலைமையில் நல்ல ஒரு ஆல் ரவுண்டராகவே திகழ்ந்து வந்தார்.

அதேபோன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இவர் இதுவரை 95 போட்டியில் விளையாடியுள்ளார். ஆனாலும் தனக்கு இருக்கும் திறமை அளவிற்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு நான் பேட்டிங் வரிசையில் களமிறங்கும் ஆர்டர் தான் காரணம் என அவர் தற்போது வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாததால் விலை போகாமல் இருந்த கேதர் ஜாதவ் ஆர்.சி.பி அணியால் மாற்று வீரராக அணிக்குள் கொண்டுவரப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில் விளையாடி வரும் அவர் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :

தற்போது நான் மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறேன். அதில் மட்டும் தான் எனது கவனம் இருக்கிறது. சொந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் தற்போது நான் ரஞ்சி டிராபி மற்றும் மகாராஷ்டிரா லீக் தொடர் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன்.

ஐபிஎல்-யை பொறுத்தவரை நான் முன்வரிசையில் இறங்கி பேட்டிங் செய்ய முடியாது. எப்பொழுதுமே பின்வரிசையில் மிகவும் கீழே தான் விளையாட அனுமதிக்கப்பட்டேன். அது எனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் மகாராஷ்டிரா லீக்கில் நான் முன்வரிசையில் களமிறங்கி விளையாடி வருகிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தீர்மானிப்பதில் பேட்டிங் வரிசையும் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் இந்த பிரீமியர் லீக் தொடரில் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் கேதார் ஜாதவ் ஒரு போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 52 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.