Prime Minister Modi – Russian President Putins decision to further strengthen bilateral relations | இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் முடிவு

மாஸ்கோ, உக்ரைன் விவகாரம், வாக்னெர் பிரச்னை குறித்து நேற்று போனில் ஆலோசனை நடத்திய நம் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினர்.

‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

இந்தப் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னெர் படை, சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக திரும்பியதால் அங்கு உள்நாட்டு கலவரம் வெடித்தது.

இந்த விவகாரத்தில் மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் நடந்த பேச்சுக்குப் பின், ரஷ்யாவுக்கு எதிரான வாக்னெர் படையின் போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் பேச்சு வாயிலாக தீர்வு காண இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், நம் பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்ய அதிபர் புடின் நேற்று போனில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, உக்ரைன் விவகாரம், வாக்னெர் பிரச்னை உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இருதரப்பு ஒத்துழைப்பில் உள்ள முன்னேற்றம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். அப்போது, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியா – ரஷ்யா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதற்கும், தொடர்பில் இருப்பதற்கும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

உக்ரைன் போர் குறித்து பேசும்போது, பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண்பது குறித்த கருத்தை புடினிடம் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்யாவில் அந்நாட்டு அரசு நிதியுதவி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புடின், “இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களும், எங்கள் பெரிய நண்பருமான பிரதமர் நரேந்திர மோடி, பல ஆண்டுகளுக்கு முன்பு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை துவக்கினர்.

”இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாகச் செயல்படும் இத்திட்டத்தை பின்பற்று வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது,” என, புகழாரம் சூட்டினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.