ஆசியகோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் மோதும் தேதி இதுதான்

அடுத்த மாதம் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. குறைவான நாட்கள் மட்டுமே இருந்தாலும் போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த தொடரை பாகிஸ்தான் அணி நடத்துகிறது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டதால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்த தேதி தொடர்பான தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள்

உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில், அந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் மல்லுக்கட்ட இருக்கின்றன. இப்போது ஆசிய கோப்பை உத்தேச அட்டவணை பங்குபெறும் அணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்படும் ஆட்சேபனைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அதிகபட்சமாக செப்டம்பர் 3 ஆம் தேதி நேருக்கு நேர் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

ஹைபிரிட் மாடலில் ஆசியக்கோப்பை

ஆசிய கோப்பை 2023 ஹைபிரிட் மாடலில் விளையாடப்படுகிறது. பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டதால், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆரம்ப போட்டிகள் பாகிஸ்தானிலும் எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. குறிப்பாக, 4 போட்டிகள் மட்டுமே பாகிஸ்தான் நடத்தும். இறுதிப் போட்டி உட்பட எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் இலங்கையில் மட்டுமே விளையாடவுள்ளது.

ஆசிய கோப்பை அணிகள்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் ஆசிய கோப்பை 2023-ல் களமிறங்குகின்றன. இந்தப் போட்டியில் நேபாள அணி முதல்முறையாக விளையாடவுள்ளது. இம்முறை ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி முறையில் நடைபெறவுள்ளது. லீக் நிலை, சூப்பர்-4 மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு குழுவிலும், நடப்பு சாம்பியன் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் மற்றொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.