\"தக்காளியை திருடிடுவாங்க..\" துப்பாக்கி உடன் வந்து தக்காளியை வாங்கிய இளைஞர்கள்! கடைக்காரருக்கு ஷாக்

போபால்: தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலர் துப்பாக்கி மற்றும் பிரீஃப்கேஸ் உடன் தக்காளியை வாங்கிய சம்பவம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நமது நாட்டில் சமையலில் தக்காளியைத் தவிர்க்கவே முடியாது என்பதால் தக்காளி விலை உயர்வைப் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளக் கூட நெட்டிசன்கள் முயல்கின்றனர். அந்தளவுக்குத் தக்காளி விலை கடுமையாகப் பாதித்துள்ளது.

தக்காளி விலை: விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், இதன் காரணமாகவே தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 40, 50 என இருந்த நிலையில், சில வாரங்களில் அது இப்போது 100ஐ கடந்து உச்சம் தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிடை பொறுத்தவரை அங்கே தினசரி 1200 டன் தக்காளி தேவை என்ற நிலையில், இப்போது அதில் பாதி அதாவது 600- 700 டன் தக்காளி மட்டுமே வருவதால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 Youth brought tomatoes carrying briefcase, gun to protest against price rise

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கூட இதுவே தான் நிலைமை. தக்காளி விலை உயர்வைக் கண்டித்து நாட்டில் பல பகுதிகளில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தக்காளி விலை உயர்வைக் கண்டித்து, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என இல்லாமல் அவர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி & பிரீஃப்கேஸ்: கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அதைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போபாலில் போராட்டம் நடத்தினர். அங்கே காய்கறி மார்கெட்டிற்கு சென்ற தொண்டர்கள், விலையுயர்ந்த தங்க, வைர நகைகளை வாங்குவது போல பிரீஃப்கேஸ் ஒன்றைக் கையில் எடுத்துச் சென்று தக்காளியை வாங்கினர்.

மேலும், கூடவே போலி துப்பாக்கியையும் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், “தக்காளி விலை அதிகமாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் இதைக் கொள்ளையடித்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகத் தக்காளியைக் கூட பிரீஃப்கேஸ் மற்றும் துப்பாக்கியுடன் வந்து வாங்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கத்தைக் கெட்ட மந்திரவாதியைப் போலப் பார்த்து அதைக் கிட்டவே நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டோம்.

 Youth brought tomatoes carrying briefcase, gun to protest against price rise

ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் அதைக் காதலியைப் போலப் பார்க்கிறார்கள். இதனால் விலைவாசி விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் ம.பி.-இல் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்கிறது. இதற்கெல்லாம் பொதுமக்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தக்காளியை தாங்கள் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று, அங்கே இருக்கும் லாக்கரில் வைத்துப் பூட்டிச் சென்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.