பிரதமர் மோடி தலைமையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. இந்த மாநாட்டின் தீம் என்ன தெரியுமா?

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் இன்று தொடங்குகிறது. இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் விர்ச்சுவல் முறையில் பங்கேற்கின்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநாட்டின்போது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா முதன் முறையாக தலைமை தாங்கி நடத்துகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்துகிறது இந்தியா. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்த இருக்கிறார்.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு எதிரான போருக்காக ரஷ்யா உலகம் முழுவதிலும் இருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள சமயத்தில் இன்று இந்த மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக விருப்பம் தெரிவித்த ஈரானின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டையும் சேர்த்துக்கொண்டு, அமைப்பு விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என கூறப்படுகிறது. இதுதவிர, பெலாரஸ் நாட்டையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், உலக நாடுகளின் தலைவர்கள் சேர்க்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த உச்சி மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி அதுபற்றி தலைவர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த SCO மாநாடு, SECURE என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, S: Security – பாதுகாப்பு, E: Economic development – பொருளாதார வளர்ச்சி, C: Connectivity – இணைப்பு, U: Unity – ஒற்றுமை, R: Respect for sovereignty and territorial integrity – இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை, E: Environmental protection – சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.