'பஜனை ஆரம்பம்' ஆபாச படமல்ல: இயக்குனர் விளக்கம்

ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் தயாராகும் படம் 'பஜனை ஆரம்பம்'. கவுஷிக், யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி எழுதி இயக்குகிறார். பி.இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். சென்னை, மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

படம் குறித்து இயக்குனர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி கூறியதாவது: பஜனை என்பது மக்களிடம் பரவலாக அறியப்பட்ட சொல் தான். ஒவ்வொரு கோயிலிலும் இன்று பஜனை ஆரம்பம் என்று போர்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம். சாதாரணமாக அதைக் கடந்து போய் இருப்போம். அந்த வகையில் தான் படத்தின் தலைப்பை வைத்திருக்கிறோம்.

ஜப்பானில் ஒருவர் ஒரே ஆண்டில் 10 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களைத் தாயாக்கி இருக்கிறார். இது ஒரு திருமண சாதனையாக பேசப்படுகிறது. பத்திரிகையில் வந்துள்ள இந்தச் செய்தியை படத்தில் வரும் காமெடியன் படிக்கிறார். அப்போது அதைக் கேட்கிற கதாநாயகன் நாம் அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார். அப்படி கதாநாயகன் கற்பனை செய்து கனவு காண்பதாக வரும் காட்சியில்தான் இப்படி வருகிறது. இங்கே நாயகன் பல பெண்களுக்குத் தாலி கட்டிப் பைத்தியம் ஆகி தற்கொலை செய்து கொள்வது போல் தான் காட்சி வரும். மற்றபடி படத்தில் பெண்களை எந்த வகையிலும் தவறாக நான் காட்டவில்லை. படம் மெடிக்கல் மாபியா பற்றித்தான் முழுமையாகப் பேசுகிறது.

அனைவருக்கும் சொல்கிறேன் இது ஆபாச படம் அல்ல. பெண்களைத் தவறாக சித்தரிக்கும் படமும் அல்ல. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இருக்காது. இன்று நாட்டில் நடக்கும் பிரச்சினை பற்றிச் சொல்கிற படம் அவ்வளவுதான். அது என்ன பிரச்சினை என்று படத்தைப் பார்க்கும் போது தெரியும். தவறாக நினைப்பவர்கள் அனைவரும் படத்தைப் பார்க்கும் போது தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.