`தங்க நகைகளை அடகுவைத்து முதலீடு செய்தால் அதிக லாபம்'- 30 பேரிடம் 490 சவரன் நகை மோசடி செய்த கும்பல்!

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள  நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதன்குமார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கிரேனா, சுந்தரலிங்கம் என்பவரின் மனைவி ஜெயலெட்சுமி, பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்து அந்தப் பணத்தை பங்குச்சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக மதன்குமாரிடம் கூறியிருக்கின்றனர்.

ஜெயலெட்சுமி, கிரேனா, பாக்கியராஜ்

அத்துடன், 10 சவரன் தங்க நகை கொடுத்தால் 10 நாள்களில் நகையுடன் ரூ.10,000 பணமும் சேர்த்துக் கொடுப்பதாகவும், 35 சவரன் தங்க நகை கொடுத்தால், புதிய கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியிருக்கின்றனர். இதை நம்பிய மதன்குமார், 06.05.2023 அன்று தன்னுடைய தாய், சகோதரியிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதில் மதன்குமாருக்கு அவர்கள் மூவரும் ரூ.40,000 பணம் மட்டுமே கொடுத்திருக்கின்றனர். அவர்கள் கூறியபடி புதிய கார் வாங்க முன்பணமும் தரவில்லை.

தொடர்ந்து மதன்குமார் அவர்களிடம் பணம் கேட்டும், சரியாக பதில் ஏதும் கூறவில்லை. இதனால், சந்தேகமடைந்த மதன்குமார், 26.06.2023 அன்று கிரேனாவின் வீட்டுக்குச் சென்று நகைகளைத் தருமாறு கேட்டதற்கு, மூன்று பேரும் சேர்ந்து மதன்குமாரிடம் அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன்குமார், 01.07.2023 அன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
பாலாஜி சரவணன்

இது குறித்து மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கிரேனா, ஜெயலெட்சுமி, பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 69 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 30 பேரிடம் இதே போன்று பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித்தருவதாகக் கூறி, 490 சவரன் தங்க நகைகளை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், “பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெறுவது என்பது நல்ல விஷயம்தான். போலி செயலிகள், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலி திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும் நிலையில், முதலீடு செய்யப்படும் திட்டங்கள் உண்மைதானா என்பதை நன்கு விசாரித்துவிட்டு முதலீடு செய்ய வேண்டும். அதிக வட்டி, கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்து, பின்னர் ஏமாறுகிறார்கள்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

எனவே, முகம் தெரியாத நபர்களை நம்பி பணத்தை முதலீடு செய்யும் முன்பு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பக் கூடாது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அரசு நிதி நிறுவனங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு, முதலீடுகளைச் செய்யலாம். நிதி சம்பந்தமான ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற்று பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.