பாண்டியா, ரோகித்துக்கு பதிலாக இந்திய அணிக்கு புதிய கேப்டன்: பிசிசிஐ புது டிவிஸ்டு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் பிறகு இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்திலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டன் தலைமையில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முதல் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கும் நிலையில், திடீரென பிசிசிஐ இந்த முடிவை எடுக்க இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணிக்கு புதிய கேப்டன்

அயர்லாந்து செல்லும் இந்திய அணியில் முழுவதும் இளம் வீரர்களை அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் உலகக்கோப்பை வர இருப்பதால் ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பிசிசிஐ இந்த முடிவு எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்த பிறகு பிசிசிஐ இறுதி முடிவெடுக்க உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தான் 20 ஓவர் தொடரில் கேப்டனாக செயல்படுவார். துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தொடருக்குப் இடையே அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை பிசிசிஐ கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா உலக கோப்பைக்கு தயாராக வாய்ப்புள்ளது. அதேபோல் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விராட் கோலி – ரோகித் சர்மா வாய்ப்பு

அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஓவருக்கான இந்திய அணி தேர்வு முற்றிலும் மாறிவிட்டது. 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் எந்த டி20 சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டி20 தொடர் நடைபெறவுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.