Doubt of Common Man: பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் எப்படிப் பணம் திரட்டுகின்றனர்?

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் முத்து என்கிற வாசகர், “பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் எப்படிப் பணம் திரட்டுகிறார்கள்? வருமான வரியை எப்படிக் கணக்கிடுகின்றனர்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அவருக்கான விரிவான பதில் இங்கே…

Producer G. Dhananjayan

“சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் பட்ஜெட் 700 கோடி என்கிறார்களே, அவ்வளவு பணம் தயாரிப்பாளரிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒரு தயாரிப்பாளர் பணம் திரட்டுகிறார்? வருமான வரி கணக்கு எப்படிக் காட்டுவார்?” என்று நமது ‘டவுட் ஆப் காமன் மேன்’ பக்கத்தில் கேட்டு இருக்கிறார் முத்து. இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளத் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசினோம். அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு…

Doubt of common man

“பொதுவாக சினிமா பட்ஜெட் எனத் தயாரிப்பாளர் குறிப்பிடுவதை முற்றிலும் உண்மை என்று நம்ப வேண்டாம். அவை அத்தனையும் மிகைப்படுத்தப்பட்ட தகவலாகவும் இருக்கலாம்.

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க… இங்கே க்ளிக் செய்யவும்.

700 கோடி செலவில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கினோம் என்று சொன்னால், உண்மை செலவு 400 கோடியாக இருக்கும்.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பெரிய பட்ஜெட் திரைப்படத்திற்கான OTT உரிமைகள் பெருமளவு பெருகிவிட்டன. அவர்களுக்கான சந்தாதாரர்களும் அதிகமான காரணத்தால் பெரிய ஹீரோக்கள் நடித்து வெளியாகும் படங்கள் OTT தளங்களுக்கு நிச்சயம் தேவைப்படுகின்றன.

எனவே ஒரு திரைப்படத்திற்கான டிஜிட்டல் உரிமையானது, கொரோனா காலகட்டத்திற்கு முன்னால் இருந்ததைவிட 2, 3 மடங்கு இப்போது பெருகி இருக்கிறது.

Producer Bhushan Kumar

சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்திற்குக் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தயாரிப்பாளர் லாபம் கண்டார். எல்லா மொழிகளிலும் சேர்த்து ஆதிபுருஷ் படத்திற்கான டிஜிட்டல் உரிமை மட்டும் 250 கோடி ரூபாய். இது அல்லாமல் சாட்டிலைட் உரிமை 150 கோடி ரூபாய்க்குச் சென்று இருக்கிறது.

படத்தின் மொத்த பட்ஜெட்டும் படம் வெளியாகும் முன்பே டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலம் தயாரிப்பாளருக்குக் கிடைத்துவிட்டது. இதற்குமேல் தியேட்டர் மூலமாக வரும் வருமானம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம்தான்.

Leo

அடுத்து வெளியாக இருக்கும் லியோ, கங்குவா, தங்கலான் போன்ற தமிழ்ப் படங்களுக்கான டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் இப்போதே பல கோடிகளுக்குப் போயிருக்கின்றன.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!

ஒரு திரைப்படத்திற்குத் திட்டமிட்டிருக்கும் மொத்த பட்ஜெட்டில் பாதி பணம் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் தளங்களிலிருந்து அட்வான்ஸாகப் பெறப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு லியோ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 140 கோடி என்றால், 70 கோடி டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளிலிருந்தே கிடைத்துவிடும்.

AK62

இவ்வளவு ஏன்… அஜித்தின் `AK 62′ படம் அறிவிக்கப்பட்டபோதே, அதன் டிஜிட்டல் உரிமையைப் பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டது Netflix.

பெரிய பட்ஜெட் படங்களின் 90% தயாரிப்பு செலவுகளைப் படம் வெளியாகுவதற்கு முன்பே மீட்க டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் உதவுகின்றன.

Pan India Films

இது அல்லாமல், படம் செய்திருக்கும் வியாபாரத்தைப் பார்த்து நிதியாளர்கள் பணம் போட முன்வருவார்கள். டிஜிட்டல், சாட்டிலைட் உரிமம் அனைத்தும் சரி பார்த்து மீதம் தேவைப்படும் பணத்தை ‘Gap funding’ செய்ய இன்று நிறைய ஏஜென்சிகள் உருவாகி இருக்கின்றன. எனவே பெரிய ஹீரோ படங்களுக்கு தற்போது ரிஸ்க்கே கிடையாது.

Budget films

ஆனால், இந்த வசதிகள் அனைத்தும் பெரிய ஹீரோக்கள் நடித்து வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே. சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். வீடு, தொழில் அடைமானம் வைத்துத்தான் தயாரிப்பாளர் பணம் போடவேண்டும். வங்கியும் சினிமாவிற்குப் பணம் தராது.

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 230 திரைப்படங்கள் வெளியாகின்றன என்றால், 40 திரைப்படங்கள் பெரிய ஹீரோக்களுடையது என்று வைத்துக்கொண்டால், மீதமிருக்கும் 190 படங்கள் பணம், நிதியாளர் என பட்ஜெட் போதுமான அளவு இல்லாமல் மோசமான நிலைமையைத்தான் சந்தித்து வருகின்றன. தமிழ் மட்டுமின்றி எல்லா மொழி திரைப்படங்களுக்கும் இதே நிலைமைதான்.

Business Tax

தயாரிப்பாளரைப் பொறுத்தவரை வருமான வரி என்பது ‘Business Tax’. ஒரு திரைப்படத்திற்குச் செலவிட்ட பணம், அது ஈட்டிய லாபத்திலிருந்து முன்பு ஏற்பட்ட நஷ்டத்தையெல்லாம் ஈடுகட்டிய பிறகு மீதம் இருக்கும் நிகர லாபத்திலிருந்து வரி வசூலிக்கப்படும். இதனை Corporate tax என்றும் சொல்வர்.

தற்போது சாட்டிலைட், டிஜிட்டல் மூலம் பெருமளவு வருமானம் வருவதால் இந்திய சினிமா முழுவதும் கார்ப்பரேட் ஆகிவிட்டது. இங்குப் பணப் பரிவர்த்தனை முழுவதும் Digital Transaction-ல் மட்டுமே நடைபெறுகிறது. வங்கி அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சென்ற ஆண்டு நிறுவனத்திற்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு இருந்தால் அதனைச் சரிபார்த்து, அதன் பின்னர் வரி வசூலிக்கப்படும்” என்றார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.