மாஜி அமைச்சர்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை: ரகசிய உறவு தொடர்ந்தால் அவ்வளவுதான்!

அதிமுக, பாஜக ஆகிய இருகட்சிகளும் கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டாலும் வெளிப்படையாகவும், திரைமறைவாகவும் நடைபெறும் சம்பவங்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மோடிக்கு அருகில் அமரவைக்கப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளர்

. அந்த கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக தான். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியின் முக்கியத்துவத்தை பாஜகவின் தேசிய தலைமை நன்றாக உணர்ந்திருக்கும் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவை தோழமை கட்சியாக கருதுவதில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுகவினர் மத்தியில் உள்ளது.

அண்ணாமலை பாதை யாத்திரை மேற்கொள்ளும் நிலையில் அவர் பாஜகவை வளர்க்கிறாரோ இல்லையோ தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனமும் அதிமுக தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

அதிமுகவினரின் கோபத்துக்கு காரணங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு 15 சதவீத வாக்குகள் மட்டுமே இருப்பதாகவும், பாஜகவுக்கு 17 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர் சுசீந்திரன் என்பவர் அறிக்கை வெளியிட அதிமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

நம்பிக்கையை காப்பாற்றுவது அண்ணாமலைக்கு நல்லது ஜெயகுமார் பேட்டி

நமது பழக்க வழக்கமெல்லாம் டெல்லியோடு மட்டும் இருக்கட்டும், அண்ணாமலையுடன் வேண்டாம் என்று தனக்கு நெருக்கானவர்களிடம் கூறிவரும் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கும் வகையில் அதிமுக மாஜிக்கள் சிலர் அண்ணாமலையின் நடை பயணத்திற்கு ஸ்பான்ஷர் செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட மாஜிக்களை அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.

நம்மை மதிக்காமல், நம் கட்சியை மதிக்காமல், ஜெயலலிதாவை மதிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசும் அவருக்கு எப்படி படி அளந்து வருகிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி பொங்கி விட்டதாக கூறுகிறார்கள். கட்சித் தொண்டர்கள் அத்தனை பேரும் மதுரை மாநாட்டை எதிர்பார்த்து காத்திருக்க, நீங்கள் அது பற்றி கவலைப்படாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நன்றாக இல்லை என்று எச்சரிக்கும் வகையிலும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.