ஹவாய் காட்டுத்தீ பலி 100ஐ நெருங்கியது | Hawaii wildfire death toll nears 100

லஹைனா, அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் மவுய் நகரில், கடந்த 8ம் தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதை அடுத்து, அருகில் உள்ள சிறு நகரங்களுக்கும் தீ பரவியது. குடியிருப்பு பகுதிகளில் தீ பரவியதை அடுத்து, மவுய் நகரில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

பழமைவாய்ந்த லஹைனா நகரின் முக்கிய பகுதிகள், காட்டுத் தீயின் கொடூர ஜுவாலைகளில் சிக்கி சின்னாபின்னமாகின.

நுாற்றுக்கணக்கான வீடுகள் சாம்பலாகின; 2,200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களும், அரியவகை மரங்களும் தீயில் கருகின. உயிர்பிழைக்க நினைத்த பலர், கடலில் குதித்து தப்ப முயன்றனர்.

இருப்பினும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதில் சிலர் பலியாகினர். இதுவரை, 93 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் சூழலில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மவுய், லஹைனா, மோலோகாய் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வீசிய அதீத வெப்பமே இந்த விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

‘தீ கட்டுக்கடங்காமல் பரவிய சூழலில், அது குறித்து எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை’ என விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 1918ல் மின்னசோட்டா, விஸ்கான்சின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 453 பேர் பலியான நிலையில், அதற்கு அடுத்த பெரிய காட்டுத் தீ விபத்தாக ஹவாய் தீ விபத்து பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.