“அப்போ இந்தி எதிர்ப்பு… இப்போ நீட்; எப்போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள்!" – வானதி சீனிவாசன் காட்டம்

நீட் தேர்வு காரணமாக அரியலூர் அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க அறிவித்து, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும், இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணியினரும் கலந்திருக்கின்றனர்.

நீட் எதிர்ப்பு போராட்டம்

இந்த நிலையில், தி.மு,க-வின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவார்கள் என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். அதில், “மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது தி.மு.க. மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், மருத்துவக் கல்வியின் தரம் குறைந்து விடக்கூடாது.

அதே நேரத்தில், திறமையான மாணவர்களின் மருத்துவர் கனவும் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது. ஆண்டுக்கு தமிழக மாணவர்களின் பங்கேற்பும், தேர்ச்சியும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், இந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.

நீட் எதிர்ப்பு போராட்டம்

நீட் தேர்வுக்காக தமிழக அரசே பயிற்சி மையங்களை நடத்தி, அதற்கு பெரும் வெற்றி கிடைத்து வந்த நிலையில்தான், 2021-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும்” என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு இருக்காது என தி.மு.க-வினர் பிரசாரம் செய்கின்றனர். இதனால், நீட் தேர்வு இருக்காது, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடக்கும் என ஒரு பகுதி மாணவர்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். இன்னொரு பெரும் பகுதி மாணவர்கள் நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்ப மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நீட் எதிர்ப்பு போராட்டம்

இதனால் நீட் தேர்வை உறுதியுடன் எழுத முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால்தான் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு சில மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு சுமை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நீட் தேர்வு நடந்தபோது, 12-ம் வகுப்பையே பயிற்சி மையங்கள் போல, ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தின. நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் எம்.பி.பி.எஸ்-ல் சேர்ந்தனர்.

தனியார் பயிற்சி மைய பிரச்னை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்து மாணவர் சேர்க்கை நடக்கும்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதன் வடிவங்கள் தான் மாறியுள்ளன. அரசு இதில் அதிக கவனம் செலுத்தும் தனியார் பயிற்சி மைய பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக இதற்கு தீர்வு காண்பதில் தி.மு.க அரசு அக்கறை காட்டவில்லை. நீட் தேர்வால் இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றமும் இல்லை.

நீட் எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. மத்திய பா.ஜ.க அரசின் வழிகாட்டுதலில், அ.தி.மு.க அரசு கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கும் பாதிப்பு இல்லை. மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, ‘ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதனால் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், எம்.பி.பி.எஸ், எம்.டி., போன்ற இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது. தமிழகத்திற்கு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை மத்திய பா.ஜ.க அரசு வழங்கியுள்ளது. இதுதவிர 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த இடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

வானதி சீனிவாசன்

அவர்களில் இருந்து தகுதியான 10 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. அகில இந்திய தொகுப்பு ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. “இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அப்படியெனில், 2021-ல் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது அரசியல் மாற்றம் இல்லையா? 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்பதெல்லாம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் தெரியாதா? “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம் எனக்கு தெரியும்” என்று உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?

உதயநிதி, ஸ்டாலின்

“நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களை போராட்டத்திற்கு அழைப்பது, சமூக அமைதியை குலைக்கும் செயல். அமைச்சரே மக்களைத் தூண்டி விடுகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பாடத்திட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்து, பள்ளிகளிலேயே பயிற்சி அளித்தால் நம் மாணவர்கள் சாதிப்பார்கள்.

ஆனால், நீட் தேர்வு குறித்த அச்சத்தை விதைத்து கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அரசியல் நடத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில், அரசியலுக்காக நாட்டின் சொத்தான மாணவர்களின் எதிர்காலத்தோடு, அவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.

வானதி சீனிவாசன்

தி.மு.க தொடங்கப்பட்டபோது அதாவது அந்தக் கட்சியின் முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இப்போது மூன்றாவது தலைமுறை நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.