7 குழந்தைகளை கொன்ற செவிலியரை கண்டுபிடிக்க உதவிய இந்திய டாக்டர்| Indian doctor who helped find nurse who killed 7 children

லண்டன்: பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொன்று, ஆறு குழந்தைகளை கொல்ல முயன்ற செவிலியரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் கண்டுபிடிக்க உதவியது, தற்போது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில், 2015 ஜூன் – 2016- ஜூன் வரையிலான கால கட்டத்தில், பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இறுதி தீர்ப்பு

இது குறித்த புகாரின்படி, 2019ல் போலீசார் விசாரணையை துவங்கினர். ஏழு குழந்தைகள் இறந்து, ஆறு குழந்தைகள் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது, மருத்துவமனையில் லுாசி லெட்பி, 33, என்ற செவிலியர் பணியாற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, 2018ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், நீதிபதிகள் தற்போது இறுதித் தீர்ப்பை வெளியிட்டுஉள்ளனர்.

அதில், செவிலியர் லுாசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுஉள்ளதாக தெரிவித்துஉள்ளனர்.

இந்த வழக்கில், தண்டனை விபரங்கள் நாளை வெளியாக உள்ளன. லுாசி லெட்பிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில், லுாசி லெட்பி கைது செய்யப்பட்டதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் முக்கிய பங்காற்றி உள்ளார்.

இந்த சம்பவங்கள் நடந்த போது, மருத்துவமனையில் அவர் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றினார்.

சந்தேகம்

லுாசி லெட்பி மீது, முதன்முதலில் டாக்டர் ரவி ஜெயராம் தான் சந்தேகத்தை எழுப்பினார்.

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்களும் சந்தேகம் அடைந்ததை அடுத்து, லுாசி லெட்பி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து, டாக்டர் ரவி ஜெயராம் கூறியதாவது:

எனக்கு இதைச் சொல்லவே தர்மசங்கடமாக உள்ளது. குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் போது, செவிலியர் லுாசி லெட்பி, எதையும் செய்யாமல், குழந்தைகளை சாகவிட்டார்.

என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது அந்த குழந்தைகளை காப்பாற்றியிருந்தால், அவர்கள் தற்போது பள்ளிக்குச் சென்றிருப்பர்.

கடந்த 2015ல், திடீரென அதிகமான குழந்தைகள் மரணமடைந்த போது, டாக்டர்கள் அவசரக் கூட்டங்களை நடத்தி ஆலோசித்தோம்.

அப்போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் லுாசி லெட்பி பற்றி தகவல் அளிக்கப்பட்டது. இதன் பின், அவரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நான் கெட்டவள்’

லுாசி லெட்பி கைது செய்யப்பட்ட பின், அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் கைப்பட எழுதிய குறிப்புகள் கிடைத்தன. அதில், ‘நான் கெட்டவள்; இதை நான் தான் செய்தேன்’ என எழுதப்பட்டிருந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.