உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிக ஊழல் புகார்கள்: கண்காணிப்பு ஆணையம் தகவல்

புதுடெல்லி,

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு, மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 ஊழல் புகார்கள் பெறப்பட்டன.

அவற்றில், 85 ஆயிரத்து 437 புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. 29 ஆயிரத்து 766 புகார்கள் நிலுவையில் உள்ளன. அதிலும், 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள், 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.

உள்துறை அமைச்சகம்

அதிகபட்சமாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிராக 46 ஆயிரத்து 643 ஊழல் புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 23 ஆயிரத்து 919 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ரெயில்வே ஊழியர்களுக்கு எதிராக 10 ஆயிரத்து 580 ஊழல் புகார்கள் வந்துள்ளன. வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8 ஆயிரத்து 129 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தேசிய தலைநகர் பிராந்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 7 ஆயிரத்து 370 ஊழல் புகார்களும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 710 புகார்களும், நிலக்கரி அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 304 ஊழல் புகார்களும், பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 2 ஆயிரத்து 617 புகார்களும், மத்திய நேரடி வரிகள் வாரிய ஊழியர்களுக்கு எதிராக 2 ஆயிரத்து 150 ஊழல் புகார்களும் பெறப்பட்டுள்ளன.

ராணுவ அமைச்சகம்

ராணுவ அமைச்சக ஊழியர்கள் மீது 1,619 ஊழல் புகார்களும், தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள் மீது 1,308 ஊழல் புகார்களும், நிதி அமைச்சக ஊழியர்கள் மீது 1,202 ஊழல் புகார்களும்,

காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மீது 987 ஊழல் புகார்களும், பணியாளர் நலத்துறை அமைச்சக ஊழியர்கள் மீது 970 புகார்களும், உருக்கு அமைச்சக ஊழியர்கள் மீது 923 புகார்களும் வந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.