‛பிரிக்ஸ் அமைப்பு விரிவு!: சவுதி உள்ளிட்ட 6 நாடுகள் இணைப்பு| BRICS: 6 more countries to become members

ஜோகன்னஸ்பர்க்: மேற்கத்திய நாடுகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், புதிதாக ஆறு நாடுகளை இணைத்து, ‘பிரிக்ஸ்’ அமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

நாடுகளுக்கு இடையே பல துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக பல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இணைந்து, 2006ல், ‘பிரிக்’ என்ற அமைப்பை உருவாக்கின. இதில், 2010ல் தென் ஆப்ரிக்கா இணைந்தது. இதையடுத்து, இந்த கூட்டமைப்புக்கு, பிரிக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

உலக மக்கள் தொகையில், 41 சதவீதத்தை, இந்த நாடுகள் பெற்றுள்ளன.

‘வீடியோ கான்பரன்ஸ்’

இந்த அமைப்பில் பல நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது தொடர்பாக பேசப்பட்டு வந்தது. அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தாண்டு, தென் ஆப்ரிக்கா ஏற்று உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் அதன் ஆண்டு மாநாடு நடந்தது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டிசில்வா ஆகியோர் பங்கேற்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றார். இந்த அமைப்பில் இணைவதற்கு, 26 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாநாட்டின் கடைசி நாளான நேற்று, புதிதாக ஆறு நாடுகளை இணைப்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா கூறியதாவது:

பிரிக்ஸ் அமைப்பில், ஆறு நாடுகளை இணைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து, கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா, மேற்காசிய நாடுகளான ஈரான், சவுதி அரேபியா, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளன.

வரும், ஜன., 1ம் தேதி முதல் இந்த நாடுகள், பிரிக்ஸ் அமைப்பில் இணைக்கப்பட உள்ளன. மேலும் சில நாடுகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி கூறியதாவது:

எந்த ஒரு உலக அமைப்பையும் விரிவு படுத்துவது, நவீனப்படுத்துவது மிகவும் அவசியம். காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

புதிய உறுப்பினர்கள் இணைவதால், பிரிக்ஸ் அமைப்பு மேலும் வலுப்பெறும்.

நம்முடைய பொதுவான நோக்கங்கள் நிறைவேறுவதற்கு புதிய வாய்ப்புகளையும் இந்த விரிவாக்கம் ஏற்படுத்தி தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய நெருக்கடி

பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைந்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது, மேற்கத்திய நாடுகளுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.

பல உலக அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் மோடி தனித் தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அனைவருக்கும் வாய்ப்பு!

ஜி – 20 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, ‘வீடியோ’வாக ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:டிஜிட்டல் நடவடிக்கைகள் மற்றும் இ – காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகம் வலுப்பெறுவதால், சந்தைப்படுத்துதல் அதிகரிக்கும். தற்போது, நாடுகளுக்கு இடையே, மின்னணு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்நேரத்தில், பெரிய மற்றும் சிறிய வர்த்தகர்களுக்கு சமமான வாய்ப்புகள் தர வேண்டும்.நியாயமான விலை மற்றும் குறைதீர்வு நடைமுறைகள் தொடர்பாக நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து வர்த்தக அமைச்சர்கள் விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சீன அதிபருடன் சந்திப்பு

இந்தியா, சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்றனர். மாநாட்டுக்கு இடையே இருவரும் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதுபோன்ற சந்திப்பு நடைபெறவில்லை.இந்நிலையில், நேற்று மாநாட்டுக்கு இடையே, இரு தலைவர்களும் சிறிது நேரம் சந்தித்து பேசினர். இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர். அப்போது, லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது என இருவரும் முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.