ரஜினி குறித்த கருத்து : சீமானுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது அவரை கடுமையாக எதிர்த்து வந்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் சீமானும் ஒருவர். என்றாலும் ரஜினி அரசியலுக்கு வராமல் பின்வாங்கிய பிறகு அவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் பெற்றதை சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

இதுபற்றி சீமான் கூறுகையில், ‛‛அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்தர் என்ற சிறுவனின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். அதனால் ரஜினிக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்கிறார். அவருக்கு பிடித்தமானவை அவரை செய்ய விடுங்கள். சுதந்திரமாக வாழ விடுங்கள். அவருக்கு தியானம் செய்வது, யோகிகளை வணங்குவது பிடித்திருக்கிறது. அதில் தவறு ஒன்றும் இல்லை. இதனால் எல்லாம் ஒரு மனிதன் சமூக குற்றவாளி ஆகிவிடுவானா? இதற்காகவெல்லாம் ரஜினியை விமர்சிக்க வேண்டுமா? அடிக்கடி இமயமலைக்கு செல்கிறார். அங்கு செல்வதால் தனது மனதுக்கு நிம்மதி கிடைப்பதாக நினைக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. ரஜினி காலில் விழுந்ததால்தான் நாட்டில் வெங்காயம் விலை ஏறி விட்டதா? அதோடு எனக்கு கூட கல்வியாளர்கள் மற்றும் அறிவு சார்ந்தோரை பார்த்தால் வணங்க வேண்டும் என்று தோன்றும். அது என்னுடைய விருப்பம். அதோடு புத்தகங்கள் படிப்பதிலும் பாட்டு கேட்பதிலும் விருப்பம் உண்டு. இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விஷயத்தில் விருப்பம் உண்டு. அதனால் ரஜினி செய்யும் விஷயங்களை வைத்து அவரை விமர்சிக்க கூடாது. எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டின் பெருமை ரஜினி.

73 வயதிலும் 150 கோடி சம்பளம் வாங்கி வரும் ஒரு மிகப்பெரிய நடிகன். அவர் நினைத்திருந்தால் வேறு மொழிகளில் கூட நடித்து பெரிய ஆளாகி இருக்கலாம். ஆனால் தன்னை வளர்த்த தமிழ் சினிமாவை மறக்காமல் முழு நேர தமிழ் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார். அது மட்டுமின்றி, யோகி ஆதித்யநாத் மற்றும் ரஜினி இடையே நட்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது. காரணம் ரஜினி உடன் நட்பு வைக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அதோடு அவர், சன்னியாசி, யோகிகளை பார்த்தால் நான் வணங்குவேன் என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். இது அவரது விருப்பம். அதனால் இதை எல்லாம் வைத்து அவரை யாரும் விமர்சிக்க கூடாது என்று கூறியிருக்கிறார் சீமான்.

சீமான் இப்படி பேசிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‛‛இப்போது தான் வீடியோவை பார்த்தேன். அண்ணன் சீமானுக்கு மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் ரஜினியை விமர்சித்த போது நானும் உங்களை விமர்சித்தேன். ஆனால் இப்போது அன்பாக பேசி உள்ளீர்கள். அதே அன்போடு உங்களை விரைவில் வந்து சந்திக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி சீமான் அண்ணா'' என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.