ஒரே நாடு ஒரே தேர்தல் : வேகம் காட்டும் மத்திய அரசு – குழுவின் உறுப்பினர்கள் யார் தெரியுமா?

சுதந்திரமடைந்த பிறகு 1952 முதல் 1967 வரை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்று வந்தது. ஆனால், அதன்பிறகு பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாலும், முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றதாலும் இந்த நடைமுறை தொடரவில்லை. மக்களவைக்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டாலும் அதற்கான பணிகள் தற்போது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே அமிர்த காலத்தையொட்டி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18ஆம் தேதி கூடும் நிலையில், அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தபோது இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், பாஜக கூட்டணியிலுள்ள கட்சிகளும் திறந்த மனதோடு வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைவராகக் கொண்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆய்வுக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக மூத்த தலைவரும், உள் துறை அமைச்சருமான அமித் ஷா, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதுபோலவே, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸிலிருந்து விலகியவருமான குலாம் நபி ஆசாத், 15வது நிதி ஆணையத்தின் தலைவராக இருந்த என்.கே.சிங், முன்னாள் மக்களவை செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஷரீஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நடத்தும் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார்.

இதுதொடர்பான அறிவிப்பில், “தற்போது ஒவ்வொரு வருடமும் மாநிலத்திற்கு மாநிலம் தேர்தல் நடைபெறுவதால் அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பணம் செலவாகிறது. அத்துடன், இரண்டு முறை அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் வளர்ச்சிப் பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தலை நடத்த தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பின் காரணமாக அது நிறைவேறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் வரவுள்ள 5 மாநில தேர்தல்களையாவது மக்களவைத் தேர்தலுடன் நடத்த ஆர்வம் காட்டி பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.