‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான ஆய்வு குழுவில் இருந்து காங்கிரஸ் விலகல்: காந்தி குடும்பத்தினர் அழுத்தம் தந்ததே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான ஆய்வு குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தினர் தந்த அழுத்தத்தால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. 8 பேர் கொண்ட இந்த குழுவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், தான் அந்த குழுவில் இடம்பெறப் போவதில்லை என்று ஆதிர் ரஞ்சன் திடீரென தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரேசகர் நேற்று கூறியதாவது: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது சக்திவாய்ந்த யோசனை. அதை செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இதன் மூலம், அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதற்காக செலவிடப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

திறம்பட செயலாற்ற முடியும்: மேலும், கணிக்கக்கூடிய தேர்தல் சுழற்சி நடைமுறையை உருவாக்குவதுடன், அரசு நிர்வாகத்தை திறம்பட செயலாற்றவும் இது அனுமதிக்கிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால், மக்களவை மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இதனால் கால விரயம்,அதிகாரிகளின் வேலைச் சுமை குறையும். இதனால், அவர்கள் மக்கள் சேவையில் தொடர்ந்து அதிக நேரம் ஈடுபட முடியும்.

காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும், வளமான இந்தியாவில் அக்கறை இல்லாத பலவீனமான கட்சிகளுக்கும் இது நிச்சயம் மோசமான யோசனையாகவே தெரியும். தங்கள் சுயநலத்துக்காகவே செயல்படும் அவர்களுக்கு, ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி கவலை இல்லை.

இந்த சூழ்நிலையில், ‘ஒரே நாடு,ஒரே தேர்தல்’ குழுவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகுவதற்கு, காந்தி குடும்பத்தினர் தந்த அழுத்தம், வற்புறுத்தல் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் செய்கிறது. அக்கட்சியின் தலைவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து நமது ஜனநாயகம், நீதித் துறை, ஊடகங்கள் குறித்து எதிர்மறை கருத்துகளை பரப்புகின்றனர்.

அதேநேரம், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைநமது நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ஒன்றியத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி விமர்சனம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், ‘மாநிலங்களின் ஒன்றியமே பாரதம். அதுதான் இந்தியா. இந்த நிலையில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் என்பது அதற்கு நேர் எதிரானது. இது, ஒன்றியம் மற்றும் அதன் அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதல் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.