IND vs SL: கொழும்புவை தாக்கிய சிராஜ் புயல்… சின்னாபின்னமான இலங்கை அணி!

Asia Cup 2023, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப். 17) கொழும்பு பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய – இலங்கை அணிகள் மோதிய போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 

இந்திய அணி தரப்பில் காயத்தால் தொடரில் இருந்து விலகிய அக்சர் படேலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த விராட், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் அணிக்கு திரும்பினர். அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது.

இலங்கை அணிக்கு குசால் பெரேரா – பதும் நிசங்கா ஆகியோர் ஓப்பனராக வந்தனர். இதில் முதல் ஓவரிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பும்ரா வீசிய பந்தில் பெரேரா டக் அவுட்டானார். அடுத்து சிராஜ் வீசிய ஓவர் மெய்டனாக மாறியது. பும்ரா வீசிய மூன்றாவது ஓவரில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.

சாதனை செய்த சிராஜ்

இதையடுத்து, சிராஜ் வீசிய நான்காவது ஓவர் தான் ஒட்டுமொத்தமாக போட்டிக்கே திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் நிசங்கா டக்-அவுட்டானார். அடுத்து மூன்றாவது, நான்காவது பந்தில் சதீரா சமரவிக்ரமா, அசலங்கா ஆகியோர் முறையே அடுத்தடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த ஓவரின் கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வாவும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்மூலம், சிராஜ் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் தொடரில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

Innings Break!

Sensational bowling display from #TeamIndia!
wickets for Mohd. Siraj wickets for vice-captain Hardik Pandya
wicket for Jasprit Bumrah

Target  for India – 51#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/kTPbUb5An8

— BCCI (@BCCI) September 17, 2023

2ஆவது வேகமான பந்துவீச்சாளர்

அதன்மூலம், ஒருநாள் அரங்கில் 29ஆவது போட்டியில் விளையாடி வரும் சிராஜ் தனது 50ஆவது விக்கெட்டையும் கடந்தார். மேலும், பந்துகளில் அடிப்படையில் பார்க்கும்போது, அதிவேகமாக 50ஆவது விக்கெட்டை எடுத்த வீரர் என்ற பெருமையை சிராஜ் (1002 பந்துகள்) பெற்றார். அஜந்தா மெண்டீஸ் 847 பந்துகளில் அவரது 50ஆவது விக்கெட்டை பெற்றார். 

தொடர்ந்து, 5ஆவது மெய்டானாக 6ஆவது ஓவரில் கேப்டன் ஷனகா சிராஜ் வேகத்தில் போல்டாக, இலங்கையின் ஆறாவது விக்கெட்டும் சரிந்தது. அதன்படி, 6 ஓவர்கள் முடிவில் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் சரிந்துவிட்டன. சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

நீண்ட நேரம் களத்தில் இருந்த மெண்டிஸ் 17 ரன்களில் சிராஜிடமே வீழ்ந்து வெளியேறினார். அடுத்து வெல்லலகே 8, மதுஷன் 1, பதிரானா டக்-அவுட் என அடுத்தடுத்து ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 15.2 ஓவரிலேயே இலங்கை 50 ரன்களில் ஆட்டமிழந்தது. துஷான் ஹேமந்தா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டி 3, பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கையின் குறைந்த ஸ்கோர் 

இலங்கை அணிக்கு ஒருநாள் அரங்கில் சொந்த மண்ணில் இது குறைந்த ஸ்கோர் ஆகும். ஒட்டுமொத்தமாக இரண்டாவது குறைந்த ஸ்கோர் இது. 2012ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்டு விளையாடிய இலங்கை 43 ரன்களில் ஆட்டமிழந்திருந்தது. அதுவே, அவர்களின் ஒட்டுமொத்த குறைந்த ஸ்கோராகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.