"சூர்யா என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். படிக்கும்போது அவர்…" – பேராசிரியர் ராபர்ட்

நடிகர் சூர்யா தான் படித்த லயோலா கல்லூரியில், 25 வருடங்களுக்கு முன்பு தனக்குத் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் எம்.ராபர்ட்டைச் சந்தித்து ஆசி பெற்றிருப்பது நெகிழ்ச்சியூட்டியிருக்கிறது.

தனது பேராசிரியரைச் சந்தித்தது சிலிர்ப்பாக இருந்ததாகவும் அவரது பிரார்த்தனைக்கு நன்றி எனவும் குறிப்பிட்டு, அவருடன் எடுத்த புகைப்படத்தைப் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது ஹார்ட் ஃபுல் வைரல் ஆகிவருகிறது.

‘யார் அந்த பேராசிரியர்?’ என ஆச்சர்யத்துடன் அவரைப் பற்றிய தேடல்கள் அதிகரித்து வரும் சூழலில், சூர்யாவின் வணிகவியல் பேராசிரியரும் துறைத்தலைவருமான எம்.ராபர்ட்டிடம் அந்தச் சந்திப்பு குறித்தும் அவரது பழைய நினைவுகள் குறித்தும் பேசினோம்.

தனது ஆசிரியர் எம்.ராபர்ட்டுடன் நடிகர் சூர்யா

“லயோலா காலேஜ்ல காமர்ஸ் துறைத் தலைவரா இருந்தேன். என்கிட்ட எத்தனையோ பிரபலங்களோட பிள்ளைங்க படிச்சிருக்காங்க. ஆனா, அதுல சூர்யா எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்தான். கடந்த 1992-1995 வரை சூர்யா என்கிட்ட படிச்சார். படிப்புல அவுட்ஸ்டாண்டிங்னு சொல்ல முடியாது. ஆனா, ரொம்ப ரொம்ப ஒழுக்கமான மாணவர். ஆசிரியர்களுக்கு அப்படியொரு மரியாதை கொடுப்பார். அவருக்கு ஃபைனான்ஸ் அக்கவுண்டிங், கார்ப்பரேட் அக்கவுண்ட்டிங், மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் வகுப்புகளை நான்தான் எடுத்தேன். கல்லூரியில் படிப்பதோடு என் வீட்டுக்கும் வந்து படிப்பார். சந்தேகங்களை ரொம்ப ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுப்பார்.

ஒருநாள் வகுப்புல சூர்யாவுக்கு உடம்பு முடியல. ‘கேண்டீன் போய் டீ சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடு’ன்னு அனுப்பிட்டேன். மறுநாள் வந்து, ‘என் மனநிலையை புரிந்த ஆசிரியர் நீங்கதான் சார்’ன்னு சந்தோஷமா சொன்னார். அவருக்கு நான் பிடிச்ச ஆசிரியராவும் மாறிப்போனேன். எந்தளவுக்குன்னா, எனக்கு முக பக்கவாதம் வந்துடுச்சு. சூர்யா அதைக் கவனிச்சு ராயப்பேட்டையில் இருக்கும் பெஸ்ட் நியூரோ சர்ஜன்கிட்ட கூப்பிட்டு போய்ட்டார். அவங்க அப்பாவுக்கும் போன் போட்டு வரச்சொல்லிட்டார். மூணே நாளில் குணமானேன். சூர்யாவுக்கு என்மேல அப்படியொரு பாசம். என் மாணவரா இருக்கும்போது, பெரிய நடிகரோட பிள்ளைங்குற எந்தவித குணத்தையும் அவர்கிட்ட நான் பார்த்ததில்லை. இப்போ, பெரிய நடிகராகிட்டார். ஆனா இப்போவரை, என் மாணவர் சூர்யாவாத்தான் இருக்கார். கொஞ்சம்கூட அவர்கிட்ட மாற்றம் தெரியல.

தனது ஆசிரியர் எம்.ராபர்ட்டுடன் நடிகர் சூர்யா

எனக்கு 86 வயசாகுது. என் மனைவி வசந்தா ராபர்ட் மூணு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க. இப்போ, மகனோட அரவணைப்புல இருக்கேன். ஓய்விலும் தனிமையிலும் ரெண்டு புத்தகங்களை எழுதி முடிச்சுட்டேன். அதை என் மாணவர் சூர்யா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். சூர்யாவோட உதவியாளருக்கு ஆறு மாசம் முன்னாடி தகவலைச் சொன்னேன். அதுக்கபுறம் நானே அதை மறந்துட்டேன். தீடீர்னு சூர்யா என் வீட்டுக்கு வந்துட்டார்.

சூர்யாவைப் பார்த்ததும் நிலவுல இருக்கற மாதிரி ஒரு சந்தோஷம். அவ்ளோ பெரிய நடிகராகிட்டார். என்னைப் பார்த்ததும், என் கால்ல மரியாதையோட விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். ரெண்டு மணிநேரம் என்கூட இருந்தார். மனைவி ஜோதிகா, பிள்ளைங்க படிப்பு பத்தியெல்லாம் பகிர்ந்துகிட்டார். முக்கியமா, ‘உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் சார். நீங்க ரொம்ப கண்டிப்பான, ஒழுக்கமான, நேர்மையான ஆசிரியரா இருந்தாலும், மாணவர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தீங்க’ன்னு சொல்லி நெகிழ வச்சுட்டார். இதைவிட எனக்கு வேற என்ன பெருமை வேணும்? அதுவும், என் மனைவி இறந்துட்டாங்க. நானும் உடல்நலம் குன்றியிருக்கேன். இந்த நேரத்துல சூர்யா வந்து பார்த்தது எனக்கு புதுத்தெம்பைக் கொடுத்திருக்கு. எல்லாம் கடவுளோட கிருபைன்னுதான் சொல்லணும்” என்கிறார் ஆச்சர்யம் விலகாதவராக!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.