சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும்

  • உலகில் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பத்தாயிரம் மடங்கு வேகமாக உயிர் பல்வகைத்தன்மையை இழக்கப்படுகிறது.
  • மனித குலம் உள்ளடங்களாக இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்து உயிரினங்களும் இருப்பு தொடர்பான நெருக்கடிக்கும் முகம்கொடுத்துள்ளன.

ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகில் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பத்தாயிரம் மடங்கு வேகமாக உயிர் பல்வகைத்தன்மை இழக்கப்படுகிறது என்றும், காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பன மனித குலம் உள்ளடங்களாக இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்து உயிரினங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுதியுள்ளதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (05) நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கு இணையாக இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த, ஈரானின் துணை ஜனாதிபதியும் சுற்றுச்சூழல் திணைக்களத்தின் தலைவருமான அலி சலாஜெ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையும் ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இரு நாடுகளும் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும், அதன் போதான ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.

2024 பெப்ரவரி 24 தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதி வரை நைரோபில் நடைபெறவிருக்கும் ஆறாவது ஐ.நா சுற்றாடல் சபையின் (UNEA) அமர்விற்கு இணையாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் நிறைவில், ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“மனித குலம் தற்காலத்தில் தனது இருப்பு தொடர்பிலான பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பன ஒன்றோடு ஒன்று தொடர்புபடுகின்றமையினால் மனிதர்களுக்கும், சமூகங்களுக்கும், பூமிக்கும் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. அத்தோடு இந்த மூன்று புவிசார் பிரச்சினைகளும் பூமியின் எல்லைகளையும் கடந்துச் சென்றுள்ளது.

உலகில் அறியப்பட்டிருக்கும் 8 சதவீதமான உயிரினங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளன. மேலும் 22 சதவீதமான உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன. இவ்வாறு 100 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விடவும் உலகில் உயிர் பல்ககைத்தன்மை அழிவடையும் வேகம் பத்தாயிரம் மடங்காக அதிகரித்துள்ளது.

சுற்றாடல் பாதிப்பு மற்றும் உயிர் பல்வகைத்தன்மை அழிவடைவதன் விளைவாக வறுமை, பட்டினி, சுகாதாரம், நகர காலநிலை என்பவற்றோடு கடல் மற்றும் நிலம் சார்ந்த 44 நிலையான அபிவிருத்தி இலக்குகளில் 35 இலக்குகள் அடையும் முயற்சிகள் தற்போதும் தடைப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்தை பொறுத்தவரையில், 2030 – 2052 ஆம் ஆண்டுக்கும் இடையில், புவி வெப்பமடைதல் 1.5% இற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு மதிப்பீடு செய்துள்ளது.

விஞ்ஞானிகளின் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சஞ்சலி டி சில்வா என்னும் இளம் விஞ்ஞானி இலங்கை நாளாந்தம் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருவதாக தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை பாதிப்புக்களை தடுக்க விரும்பாத சில நாடுகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணம் என்பதோடு, எனது குடும்பமாக கருதும் எனது நாட்டு மக்களுக்கு அந்த பாதிப்புக்கள் நேரக்கூடாது என்றே விரும்புகிறேன்.

ஜேர்மனி கண்காணிப்பு அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் காலநிலை அனர்த்தம் தொடர்பிலான சுட்டியில், ஜேர்மனியையும் , இலங்கைளையும் கடுமையான காலநிலை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகள் வரிசையில் பட்டியலிட்டுள்ளது.

COP 27 காலநிலை மாற்ற மாநாட்டில் வெளியிடப்பட்ட இலங்கையின் காலநிலை மீள்திறன் திட்டம் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உட்பட இயற்கை சூழல் சார்ந்த தீர்வுகளை துரிதப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலங்கையின் நிகழ்ச்சிநிரல் வரைபடம் COP 28 மாநாட்டில் வெளியிடப்படும்

Kunming-Montreal என்னும் உலகளாவிய பல்வகைத்தன்மை கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்காக 2016 முதல் 2022 வரையிலான இலங்கையின் தேசிய உயிர் பல்வகைமைக்கான மூலோபாய செயல் திட்டத்தினை புதுப்பிக்கும் செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளோம்.

36 உலகளாவிய உயிர் பல்வகைமை வெப்ப வலயங்களில் இலங்கையும் ஒன்றாக இருப்பதால், பழமையான சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக உயிரினங்கள் குறித்த தேசியக் கொள்கையை வகுக்க சுற்றாடல் அமைச்சிற்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

பொதுவான மற்றும் அபாயகரமான கழிவுகளின் ஒன்பது வகைகளை உள்ளடக்கிய வகையில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை இலங்கை உருவாக்கியுள்ளது. நாட்டில் இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தவதற்காக இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவ தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது.

2019 இல் நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான தேசிய கொள்கையை இலங்கை வகுத்தது. பசுமை கொள்முதல் கொள்கை மற்றும் பசுமை பெயரிடல் கட்டமைப்பு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை இழப்பு மற்றும் சூழல் மாசடைதல் ஆகிய மூன்று சிக்கல்களைத் தீர்க்க புதிய அறிவு மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்த புதிய காலநிலை மாற்றச் சட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தை உருவாக்க எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பசுமைப் பொருளாதாரத்திற்கான மாற்றத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். ஆனால் அதற்கான செலவுகள் உள்ளன.

2023 முதல் 2042 வரை காலநிலை சுபீட்சத் திட்டத்தை செயல்படுத்த 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். 2050 ஆண்டாகும்போது நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலங்கையின் வழிகாட்டல்களை செயல்படுத்த 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை தேவைப்படுகின்றது. பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை. இதற்குத் தேவையான வளங்களுக்கான மூலங்களை நாம் எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்ற கேள்வி உள்ளது.

இந்த பணத்தை உள்நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது. இது இலங்கை மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல. வளரும் நாடுகளுக்கு 2030ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDC) பூர்த்தி செய்ய 5.9 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய பசுமை வலுசக்தி தொழில்நுட்பங்களுக்கு மேலும் 04 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. COP 27 இல், காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு சேதம் மற்றும் இழப்புகளுக்கு நிதியளிப்பதற்காக இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது.

சார்ம் எல் ஷேக் அமுலாக்கத் திட்டம் மூலம், மாற்றம் குறித்த குழுவொன்று நிறுவப்பட்டது. அந்தக் குழுக் கூட்டங்களிலும், அண்மைக்கால ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடர்களிலும் கலந்துரையாடப்பட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு இது வரை தீர்வு காணப்படவில்லை.

பெரும் அதிகாரப் போட்டி, புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களின் சொந்த உள்நாட்டுக் கொள்கை ஆதிக்கம் செலுத்தும் சூழலில், காலநிலை மாற்றம் போன்ற மனித உயிர்வாழ்வு குறித்து நிலவுகின்ற சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட உலகளாவிய தலைவர்களால் முடியவில்லை என்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது.

உதாரணமாக, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்கா தலைமைத்துவத்தை எதிர்பார்க்க முடியாது. அடுத்த ஆண்டு அமெரிக்காவிற்கு தேர்தல் ஆண்டாக இருப்பதோடு, முதலாவதாக காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களுக்கும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தீவிரமாக இருப்பவர்களுக்கும் இடையே உள்நாட்டு ரீதியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை வெற்றிகொள்ள வேண்டும்.

மேலும், உக்ரைன் போரினால் ஐரோப்பா பிணைக்கப்பட்டுள்ளது. இந்து-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்.

பிரிட்ஜ் டவுன் முன்முயற்சி, மக்கள் மற்றும் பூமிக்கான பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரின் பல முயற்சிகள் உட்பட பல்வேறு உலகளாவிய அமைப்புகள் காலநிலை மாற்றத்தின் சிக்கலைத் தீர்க்க முயற்சித்துள்ளன.

இதுவரை எழுந்துள்ள பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் எமக்குத் தெரிகின்றன. ஆனால் பணமும், தலைமைத்துவமும், செயற்பாடும் இன்மையே குறைபாடாக உள்ளது. எனவே, ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாம் மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள பிற நாடுகளும் மாற்றுத் தலைமைப் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் மற்றும் உயிர்பல்வகைமை இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடுவதில் புவிசார் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகள் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்திற்கு குறைந்தளவில் பொறுப்பான நாடுகள், இழப்புகளின் விகிதாசாரத்தில் கூடிய பங்கை ஏற்காமல் இருப்பதை உறுதிசெய்ய, எங்களுக்கு ஒரு காலநிலை நியாய மன்றம் தேவை. இதை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் கூட்டாகக் குரல் எழுப்ப வேண்டும்.

நட்டம் மற்றும் இழப்பு தொடர்பான நிதியம் பற்றிய விவாதம் தொடர்ச்சியாக இருப்பதோடு, அதன்போத நாம் பின்வருவனவற்றையும் குறித்து வலியுறுத்த வேண்டும்.

எம்மிடம் பணம் குறைவாகவே உள்ளது. ஆனாலும் நாம் குறைந்தபட்சம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கான முன்முயற்சிக்கான 100 பில்லியனில் இருந்து இந்தப் பணிகளை ஆரம்பித்து, அதைச் செயல்படுத்தி சாதகமான முடிவுகளைப் பெறுவோம்.

அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்கள் குறைந்தபட்சம் 2040 ஆண்டுக்குள் தங்களது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை அடைவதற்கு அர்ப்பணிக்க வேண்டும். இந்த இலக்குகளுக்கு இணங்கத் தவறினால், அத்தகைய நாடுகள் உலகின் பிற நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அதன்போது, அந்த நிதி வளரும் நாடுகளின் காலநிலை மாற்றத் தணிப்பு, அதற்கான தழுவல் மற்றும் காலநிலை சுபீட்சத்தை அடைந்துகொள்ளல் தொடர்பான நிதித் தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலகளாவிய அபிலாசைகள் போதுமானதாக இல்லை என்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது. வளரும் நாடுகளில் ஏற்படும் காலநிலை மாற்றப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தத் தேவையான உத்தரவாதங்களை வழங்கவும் மற்றும் தனியார் நிதி வழங்குதலை ஊக்குவிக்கவும் புதிய அபிவிருத்தி வங்கியின் எஞ்சிய நிதியை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரிட்ஜ் டவுன் முன்முயற்சி தெளிவாகக் கூறியுள்ளது.

புதிய அபிவிருத்தி வங்கியின் மூலம் வழங்கப்படும் கூடுதல் சலுகை நிதியும் இதற்கு முக்கியமான தேவையாகும். காலநிலை மாற்றம் தொடர்பான முதலீடுகள் நீண்ட கால பயன்களை வழங்குகின்றன, அதற்காக குறுகிய கால அதிக செலவுகளுடன் கூடிய கட்டமாக வழங்கப்படும் தனியார் நிதியங்களினால் நிதியளிக்க முடியாது.

நிதி நெருக்கடியினால் புதிய அபிவிருத்திக்கான வங்கி (NDB), சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் கடன் வட்டிவீதம் அதிகரித்திருப்பதோடு, கடன் பெறும் நாடுகள் மீது மேலும் நிதிச் சுமையை செலுத்தாமல் இருப்பதற்கான மாற்று வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வது காலோசிதமான செயற்பாடாக அமையும்.

இந்த உலக அமைப்புக்களுக்குள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அல்லது உலகின் தென் பகுதி நாடுகளின் அழுத்தங்கள் இருந்திருக்குமாயின் பல வருடங்களுக்கு முன்னதாக காலநிலை நிகழ்ச்சி நிரலுக்குள் மேற்படி விடயங்கள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும்.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் சலுகைகளை வழங்குவது தொடர்பில் கென்யா முன்வைத்துள்ள கோரிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்புக்கள் மற்றும் நட்டஈடு தொடர்பான நிதியத்தின் பணிகளை நிறைவு செய்யும் அதேநேரம் அதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பங்களிப்பும் அவசியமாகும்.

2050இற்கும் அப்பாலான இலக்குகளை கொண்டு நகரும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சுயமான ஈடுபாட்டை நாம் வலியுறுத்த வேண்டும். காலநிலை தொடர்பிலான சர்வதேச நீதிமன்றத்திற்கு ஓரிரு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. காலநிலை பாதிப்புக்களை மனித உரிமைகளாக ஏற்றுக்கொள்ளும் விடயமாகவும் அதனை கருத முடியும். அதுவே உயிர்வாழும் உரிமையின் அர்த்தமாகும். காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலான பொறுப்புக்களை கொண்டுள்ள நாடுகள் தமது பொறுப்பு துறந்துச் செயற்படுமாயின் மக்களின் உயிரைப் பறிக்கும் செயலாக அமையும்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் துணை ஜனாதிபதியும் ஈரானின் சுற்றாடல் துறையின் தலைவருமான அலி சலாஜெகே(Ali Salajegheh), சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டத்தின் (UNEP) பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் எலிசபெத் மருமா மிரேமா (Elizabeth Maruma Mrema), சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான பிரதான குழுவின் பிரதிநிதி அனிவ மேரி கிளார்க் (Aniva Marie Clark) மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.