அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில்   (07) கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்லூரிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை எனவும், அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.