உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்…!

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் லிட்டன் தாஸ் ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து தன்சித் ஹசனுடன் மெஹதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணியின் ஸ்கோர் 40ஆக உயர்ந்த போது பிரிந்தது. இதில் தன்சித் ஹசன் 16 ரன்னிலும், மெஹதி ஹசன் மிராஸ் 30 ரன்னிலும், அடுத்து வந்த ஷாண்டோ 7 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதனால் 56 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வங்காளதேசம் தடுமாறியது. இதையடுத்து அனுபவ வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 152 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. ஷகிப் 40 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மறுபுறம் முஷ்பிகுர் ரஹீம் அரைசதம் அடித்த நிலையில் 66 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஹிரிடோய் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மஹ்மதுல்லா, தஸ்கின் அகமது ஜோடி சேர்ந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.