சர்வதேச பசி குறியீட்டில் இந்த முறையும் இந்தியா பின்னடைவு.. ஏற்க மறுத்த மத்திய அரசு

உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பசி குறியீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 125 நாடுகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் 102வது இடத்திலும், வங்காளதேசம் 81வது இடத்திலும், நேபாளம் 69வது இடத்திலும், இலங்கை 60வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் பட்டியலில் பெலாரஸ், போஸ்னியா-ஹெர்சகோவினா, சிலி, சீனா, குரோஷியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. சாட், நைஜர், லெசோதோ, காங்கோ, ஏமன், மடகாஸ்கர் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் கடைசியில் உள்ளன.

இந்த பசி குறியீட்டு பட்டியல், தவறான மதிப்பீடு என்று இந்தியா தெரிவித்துள்ளது. பட்டியலையும் நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகளாவிய பசி குறியீட்டு பட்டியல், பசி குறித்த தவறான அளவீடாக தொடர்கிறது. அது இந்தியாவின் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை. இந்த குறியீட்டை கணக்கிட எடுத்துக்கொண்ட 4 காரணிகளில் 3 காரணிகள், குழந்தைகளின் சுகாதாரத்துடன் தொடர்புடையவை. எனவே, ஒட்டுமொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ள கணக்கீடாக அதனை எடுத்துக் கொள்ள முடியாது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த 4-வது காரணியான, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்கள் தொகை விகிதம் பற்றிய மதிப்பீடானது, 3 ஆயிரம் நபர்கள் என்ற மிகச் சிறிய அளவிலான நபர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.