ஒரே ஒரு ரன்-அவுட்… ஆப்கனுக்கு கேப்டனால் வந்த சோதனை – சுழல் மேஜிக் உண்டா?

ENG vs AFG: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC ODI World Cup 2023) 13வது லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று (அக். 15) மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

பட்டாசாக வெடித்த குர்பாஸ்

அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் – இப்ராகிம் சத்ரான் ஆகியோர் சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். சத்ரான் விக்கெட்டை விடாமல் குர்பாஸிற்கு (rahmanullah gurbaz) துணையாக நிற்க, குர்பாஸ் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ரீஸ் டோப்ளி என அனைவரின் ஓவர்களையும் தெறிக்கவிட்டார். அவர் அரைசதமும் கடந்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆட்டத்தை மாற்றிய ரன்-அவுட்

அந்த வகையில், 116 ரன்களை எடுத்திருந்த போது இந்த பார்ட்னர்ஷிப்பை அடில் ரஷித் உடைத்தார். சத்ரான் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரஹ்மத் ஷாவும் 3 ரன்களில் அடில் ரஷித் ஓவர்களில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான அடுத்த பந்திலேயே ஆப்கானிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. 

அப்போது களத்திற்கு வந்த கேப்டன் ஷாகிடி பக்கத்திலேயே அடித்து ரன் ஓட, குர்பாஸ் அகமது ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் 57 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடவை உண்டாக்கியது. அப்போது ஸ்கோர் 18.5 ஓவர்களில் 122 ஆக இருந்தது. 

ரஷித் கான் ஆறுதல் 

இதையடுத்து பார்ட்னர்ஷிப் என்பது சரியாக அமையவேயில்லை. ஓமர்சாய் 19, ஷாகிடி 14, நபி 9 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும், இக்ரம் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடி வந்தார். அவருடன் இணைந்த ரஷித் கானும் அதிரடியாக ரன்களை அடித்தார். ரஷித் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இக்ரம் அரைசதம் 

தொடர்ந்து, முஜீப் உர் ரஹ்மான் இக்ரம் உடன் கைக்கோர்த்து சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இக்ரம் அரைசதம் கடந்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். முஜீப் உர் ரஹ்மானும் 28 ரன்களில் அடுத்த ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் நவீன் உல் ஹக் ரன் அவுட் ஆக ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட்டானது. 49.5 ஓவர்களில் அந்த அணி 284 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித் 3, மார்க் வுட் 2, ரூட், லிவிங்ஸ்டன், டோப்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.