மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை: அமெரிக்க அதிபர் மாளிகை பரபரப்பு தகவல்| The US Presidents House is sensational that Israel is not involved in the hospital attack

வாஷிங்டன்: ‘காசாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த ஏவுகணை தாக்குதலில், இஸ்ரேல் ராணுவத்துக்கு தொடர்பு இல்லை என்பதை உளவு அமைப்பு தகவல்கள் உறுதி செய்கின்றன’ என, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் பயங்கரவாதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

‘இஸ்லாமிக் ஜிஹாத்’

இந்த தாக்குதலுக்கு, பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை, இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால், காசா பகுதியில் உள்ள ‘இஸ்லாமிக் ஜிஹாத்’ என்ற அமைப்பு செலுத்திய ஏவுகணை தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘இந்த தாக்குதல் நடந்துள்ள விதத்தை பார்க்கும்போது, இஸ்ரேலில் இருந்து அது செலுத்தப்பட்டதாக தெரியவில்லை; மறுபக்கத்தில் இருந்தே நடந்துள்ளது’ என, குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆன்டரின் வாட்சன் நேற்று கூறியுள்ளதாவது:

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. உளவுத்துறை தகவல்கள், ஏவுகணைகளின் தன்மை, செயற்கைக்கோள் படங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதைத் தவிர, பயங்கரவாதிகள் இடையே நடந்த உரையாடல் பதிவு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி பார்க்கையில், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வடகொரியா ஆயுதம்?

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஆயுத ‘சப்ளை’ செய்வதாக பரவலாக புகார் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், இதை வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. எந்த ஒரு நாட்டுக்கும், எந்த ஒரு பயங்கரவாத அமைப்புக்கும் தங்களுடைய ஆயுதங்களை சப்ளை செய்வதில்லை என, வடகொரியா கூறி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான படங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ள நிபுணர்கள், இவை வடகொரியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்துள்ளனர்.

கட்டடத்தில் தாக்குதல்

இந்நிலையில் பாதுகாப்பான பகுதி என இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததை அடுத்து, வடக்கு பகுதியில் இருந்து தெற்கு காசா பகுதிக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சென்று சேர்ந்தனர்.

இந்நிலையில், தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நேற்று தீவிரப்படுத்தியது. கான் யூனிஸ் நகரில் அடைக்கலம் தேடி நுாற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்த கட்டடம் மீது, நேற்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 12 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் காயம் அடைந்தனர்.

இதனால், பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பதற்றத்துடன் அங்கும் இங்கும் அலைந்து வருகின்றனர். தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால், எகிப்தின் நிவாரண பொருட்களை காசாவுக்குள் அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் நடந்த தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத குழுவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.