'பூங்கா நகர்' பெங்களூருவின் அழகை கண்டு ரசிக்க 250 மீட்டர் உயர காட்சிமுனை கோபுரம்

பெங்களூரு:

கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களூரு தற்போது தகவல் தொழில்நுட்ப உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. ஏற்கனவே பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயர் பெற்ற நம்ம பெங்களூரு இன்று தகவல் தொழில்நுட்ப நகரம் என உலகம் அறியும் வகையில் அழைக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம் தான்.

ஆனால் பெங்களூரு மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், வாகன பெருக்கம், காற்று மாசுபாடு ஆகியவை மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

இதை தீர்க்கவும், பெங்களூரு மாநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் பெங்களூரு நகர வளர்ச்சி துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவர் பிராண்ட் பெங்களூரு என்ற திட்டத்தை அமல்படுத்தி பெங்களூருவின் வளர்ச்சிக்கு வித்திடுவதே தனது லட்சியம் என அறிவித்து அதற்கான திட்டங்களை வகுத்து முன்மொழிந்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பெங்களூரு மாநகரின் மொத்த அழகையும் கண்டு ரசிக்கும் வகையில், நகரின் மையப்பகுதியில் காட்சிமுனை கோபுரம் (ஸ்கை டெக்) அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 8 முதல் 10 ஏக்கர் பரப்பளவு நிலத்தை அடையாளம் காண டி.கே.சிவக்குமார் பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டம் பற்றிய தகவலை டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, அந்த காட்சிமுனை கோபுரத்தின் மாதிரி படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு இணையவாசிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதாவது பெங்களூரு நகரில் பல இடங்களில் நடைபாதைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறியுள்ளனர். அத்துடன் இது வீண் செலவு என்றும் அவர்கள் கருத்து பகிர்ந்துள்ளனர்.

இதுபற்றி கமலாகர் பண்டி என்பவர் கூறுகையில், நகரின் மிகப்பெரிய பிரச்சினை போக்குவரத்து நெரிசல். முதலில் புறநகர் ரெயில் பாதை செயல்படுத்த வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் 30 சதவீதம் குறையும். காற்று மாசுபாடு, தண்ணீர் மற்றும் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோல் அனிகேஷ் குப்தா என்பவர் கூறுகையில், பெங்களூருவுக்கு இதுபோன்ற சுற்றுலா தலம் தேவை. இது ஒரு சிறந்த திட்டம். இந்த திட்டம் பெங்களூருவுக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும் என ஆதரவு கருத்துக்களை கூறியுள்ளார்.

பங்களூருவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள இந்த காட்சிமுனை கோபுரம் 250 மீட்டர் (820 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். தமிழ்நாடு ராமேசுவரத்தில் உள்ள டி.வி. கோபுரம் 323 மீட்டர் உயரம் ஆகும். இதில் மனிதர்கள் ஏறி பார்க்க கூடிய வசதி இல்லை.

எனவே பெங்களூருவில் இந்த காட்சிமுனை கோபுரம் அமைக்கப்பட்டால், அது நாட்டிேலயே உயரமான காட்சி முனை கோபுரம் என்ற பெயரை பெரும்.

இந்த கோபுரத்தில் வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது உணவக வசதி, அத்தியாவசிய வசதியும் அந்த கோபுரத்தில் அமைக்கப்படும்.

இந்த காட்சி முனை கோபுரத்தை நாகவரா ஹலசூர் ஏரி அல்லது ஒயிட்பீல்டுவில் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.