வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.

முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

இந்நிலையில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “மற்றொரு விதிவிலக்கான போட்டி..! வங்கதேசத்துக்கு எதிரான அபார வெற்றியால் எங்கள் கிரிக்கெட் அணிக்கு பெருமை. உலகக் கோப்பையில் தற்போது எங்கள் அணி சிறப்பான பார்மில் உள்ளது. அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள்” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.