தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு: மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி,

சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி சார்பில் வக்கீல் சமீர் மலிக் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, வளர்மதி, கே.எஸ்.மஸ்தான், டி.எம்.அன்பரசன், சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியம், எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெறும் வழக்குகளை சிறப்பு கோர்ட்டு அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். நிலுவையிலுள்ள புலன்விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.

நிலவர அறிக்கை

தமிழக அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்.

அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, கே.எஸ்.மஸ்தான் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்குகளை விசாரிக்க கிரிமினல் சட்டத்தில் அனுபவமிக்க, தமிழ்நாட்டை சாராத நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த பொதுநல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஆட்சேபம்

மனுதாரர் கருப்பையா காந்தி சார்பில் வக்கீல்கள் சமீர் மலிக், ரவி பிரகாஷ், அஸ்து கண்டல்வால் ஆகியோருடன் மூத்த வக்கீல் தம்ம சேஷாத்ரி நாயுடு ஆஜராகி மனுவில் தெரிவிக்கப்பட்டதை குறிப்பிட்டு வாதிட்டனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அடிசனல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, வக்கீல் டி.குமணன், மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே, என்.ஆர். இளங்கோ ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்தனர்.

உத்தரவு

வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த ஆட்சேபனைகளை பதில் மனுவாக 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும், சி.பி.ஐ. இயக்குநருக்கும், தமிழ்நாடு டி.ஜி.பி.க்கும் உத்தரவிடப்படுகிறது. பதில்மனுக்களுக்கு மனுதாரர் விளக்கமனுவை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிசம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.