’நாங்க சாம்பியனே இல்லை.. தோல்விக்கு இதுதான் காரணம்’ இங்கிலாந்து கேப்டன் புலம்பல்

இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் விளையாடி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. பவுலிங்கில் மாஸ் காட்டியது போல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடிய இலங்கை அணி 25.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேற, இங்கிலாந்து அணி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அனைத்து ஒருநாள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியே இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றியை பெற்றிருக்கிறது.

இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய 2019 ஆம் ஆண்டு கூட 20 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை இலங்கை வீழ்த்தியிருக்கிறது. இந்த தோல்வி இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரை வெகுவாக பாதித்திருக்கிறது. போட்டிக்கு பிறகு பேசும்போது, ” ஒரு கேப்டனாக இந்த தோல்வி என்னை அதிகம் பாதித்துவிட்டது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. பிளேயிங் லெவனில் தரமான பிளேயர்கள் இருந்தாலும், எங்களின் தரத்துக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. சிறப்பான கிரிக்கெட் ஆடுவதில் இருந்து நாங்கள் ரொம்ப தொலைவுக்கு சென்றுவிட்டோம் என நினைக்கிறேன். பெங்களூரு போன்ற பிட்சில் 150 ரன்களுக்கு ஆட்டமிழப்பது என்பதெல்லாம் தரமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 

October 26, 2023

நாங்கள் இந்த உலக கோப்பையில் இதுவரை சிறப்பாக ஆடவில்லை. எல்லாம் எங்களுக்கு தவறாகவே நடக்கிறது. தவறுகளை திருத்தவில்லை. அணியின் தோல்விக்கு என்னையும் ஒரு முக்கிய காரணமாக குறிப்பிடுகிறேன். என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருக்கவில்லை. ஜோ ரூட் ரன் அவுட் தேவையில்லாத ஒன்று. இதற்கு முன்பு நாங்கள் சிறப்பாக ஆடிய நேரத்தில் இப்படியான ரன் அவுட்டுகளை எல்லாம் நீங்கள் பார்க்க முடியாது. இது மட்டும் தோல்விக்கு காரணம் என்று கூறவில்லை. இதனைப்போல பல தவறுகளை ஒரு அணியாக நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறோம்” என மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் பட்லர்.  

உலக கோப்பை 2023 தொடர் தொடங்குவதற்கு முன்பு பேசும்போது, நாங்கள் ஒரு சாம்பியன் அணி என்று திரும்ப திரும்ப தன்னுடைய பேட்டிகளில் கூறிக் கொண்டிருந்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர். ஆனால் அவருக்கு இப்படியொரு நிலமையா? என்ற நிலை இப்போது வந்திருக்கிறது. உலக கோப்பைக்கு முன்பு இங்கிலாந்து அணி ஒரு வலுவான அணியாக பேப்பரில் காணப்பட்டது. ஆனால் களத்தில் கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.