நாடு திரும்பும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து…? கம்பேக் கொடுக்கும் இலங்கை – மாறும் காட்சிகள்!

ICC World Cup 2023, ENG vs SL: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 25ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. புள்ளிப்பட்டியலில் இலங்கை 7ஆவது இடத்திலும், இங்கிலாந்து 8ஆவது இடத்திலும் உள்ள நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. 

அந்த வகையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (Team England) கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் மாற்றங்கள் இருந்தன. குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோரும், இலங்கை அணிக்கு ஆஞ்சலோ மேத்யூஸும் உள்ளே வந்தனர். தொடர்ந்து, பேர்ஸ்டோவ் – டேவிட் மலான் ஜோடி வழக்கம்போல் இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் இறங்கியது.

சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து

இந்த ஜோடி 45 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மலான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சில ஓவர்களிலேயே ஜோ ரூட், பேர்ஸ்டோவ், பட்லர், லிவிங்ஸ்டன் ஆகியோர் அடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். மொயின் அலி – பென் ஸ்டோக்ஸ் ஜோடி சிறிது நேரம் நீடித்தது.

இந்த ஜோடியும் 37 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மொயின் அலி 15 ரன்களுக்கும், அடுத்து வந்த வோக்ஸ் டக்அவுட்டாகியும் வெளியேறினர். ஒருமுனையில் நிதானம் காட்டி வந்த பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 73 பந்துகளில் 6 பவுண்டரிகளை மட்டும் அடித்தார். கடைசி கட்டத்தில் ரஷித், வுட் ஆகியோர் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. டேவிட் வில்லி 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடரும் இலங்கையின் ஆதிக்கம்

இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும், ஆஞ்சலோ மேத்யூஸ், கசுன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுளையும், தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 157 ரன்கள் என்ற இலக்கை எட்டி இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, 2003, 2007, 2011, 2015, 2019 என கடந்த ஐந்து உலகக் கோப்பை போட்டிகளிலும் இங்கிலாந்தை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. இதன்மூலம், ஆறாவது முறையாக இலங்கை அந்த வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

வெளியேறுகிறதா இங்கிலாந்து அணி?

தற்போது புள்ளிப்பட்டியலின்படி, இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் மூன்று தோல்வி, 1 வெற்றி என 2 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியும் 4 போட்டிகளில் மூன்று தோல்வி, 1 வெற்றி என 2 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியை வெல்வதன் மூலம் கூடுதலாக 2 புள்ளிகளை பெறும். 

மேலும், இங்கிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தால் பெரும் பின்னடைவாக அமையும். இனி அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற (Semi Final Race) வேண்டும் என்றால் அடுத்த 4 போட்டிகளிலும் அதிக நெட் ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு அந்த அணி தகுதிபெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2024 ஏலம் எங்கு? எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.