திமுகவினர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்புவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

நாமக்கல்: “வாக்கு வங்கிக்கா தீவிரவாதத்தை திமுக ஊக்குவிகிறது. வன்முறைக் களமாக தமிழகம் மாறி வருகிறது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என திமுகவினர் கோஷம் எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 2-வது அவர் சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியது: “அடித்தட்டு மக்களுக்கு இங்கு ஆட்சி நடக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆட்சி நடக்கிறது. அதுதான் ஜனநாயகம் என நினைக்கின்றனர்.

பழங்குடியின மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு எதிராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என தெரிவித்ததது. எனினும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு எதிரான அரசாக திமுக தலைமையிலான அரசு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

தமிழக முதல்வரை பொறுத்தவரை குடும்ப மட்டுமே நன்றாக இருக்ககூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். பாஜக ஆட்சி என்பது அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சி மகன், மருமகனுக்கான ஆட்சி. ஊழல் பற்றி திமுக பேசக் கூடாது. திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் திமுகவினர் பாகிஸ்தான் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்புகின்றனர். திமுகவுக்கு வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். முன் எப்போதும் நடந்திராத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு போடுகின்றனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது” என்றார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.