Tamil News Live Today: Andhra Train Accident: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்! – 6 பேர் பலி, பலர் காயம்!

Andhra Train Accident: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்! – 6 பேர் பலி, பலர் காயம்!

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், ரயில்வே காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

ஒரு ரயில் விஜயநகரத்திலிருந்து ஒடிசா மாநிலம், ராய்கடாவுக்கு இயக்கப்பட்டது. அதேசமயம் விசாகப்பட்டினத்திலிருந்து ஆந்திர மாநிலம், பலாசாவுக்கு மற்றொரு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில்தான், இரண்டு ரயில்களும் மோதிக்கொண்டிருக்கின்றன. சம்பவ இடத்திற்கு நிவாரண ரயிலும் விரைந்திருக்கிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், மருத்துவ சிகிச்சைக்கு தேவையானவற்றை உடனடியாக ஏற்பாடு செய்திடவும், மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த விபத்தில் பலர் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி; சென்னை, மதுரை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!

கேரளாவில் கிறிஸ்துவ மத கூட்டரங்கில் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம், தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்திருக்கின்றனர். மத கூட்டரங்கில் வெடித்தது டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு என கேரள போலீஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், கேரள-தமிழக எல்லையில் தமிழக போலீஸாரும் சோதனை மேற்கொண்டு, பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சென்னை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தவிர்த்து, அம்பத்தூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களிலும் இருப்புப்பாதை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

`காஸாவுக்கு எதிரான 2-ம் கட்ட போர் தொடங்கியிருக்கிறது!’ – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல்மீது கடந்த 7-ம் தேதி காஸாவின் ஹமாஸ் அமைப்பு, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காஸா-மீது கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. ஹமாஸும் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. மோதல் தீவிரமடைந்து, போராக மாறியதை அடுத்து, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதிலும், காஸாவில் உயிர் பலி மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காஸா சிதைந்து போயிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் ஐ.நா-வின் முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர், 23-வது நாளை எட்டியிருக்கிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000-ஐ கடந்து விட்டதாகவும், உயிரிழந்தோரில் பாதி பேர் குழந்தைகள் என்றும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஐ.நா அமைப்பு மற்றும் பல்வேறு உலக நாடுகளின் போர் நிறுத்த அழைப்பை தொடர்ந்து நிராகரித்து வரும் இஸ்ரேல், `ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை வேரறுக்கும் வரை ஓயப் போவதில்லை’ என்பதில் உறுதியாக இருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறது. நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.