டக்-அவுட்டில் தெண்டுல்கரை சமன் செய்த விராட் கோலி..!!

லக்னோ,

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

கவர் டிரைவ் மற்றும் ஆப் சைடு திசைகளில் கோலி பவுண்டரி அடிக்க முயன்றபோது, இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்து தடுத்தனர். ரன் கணக்கை தொடங்க சிரமப்பட்ட கோலி, டேவிட் வில்லே வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றபோது, பந்து மிட்ஆஃப் திசையில் நின்ற ஸ்டோக்ஸ் நோக்கி சென்றது. ஸ்டோக்ஸ் அதனை எளிதாக கேட்ச் பிடித்தார்.

இதனால் இந்த ஆட்டத்தில் விராட் கோலி 9 பந்துகளை சந்தித்து ரன்னின்றி வீழ்ந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோலி டக்-அவுட் ஆனது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) டாப்-7 இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்களில் முதலிடத்தில் உள்ள சச்சின் தெண்டுல்கரின் (34 டக்) மோசமான சாதனையை கோலி (34 டக்) சமன் செய்தார்.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் 49-வது சதத்தை அடித்து தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று பார்த்தால், அவரது டக்-அவுட் சாதனையை சமன் செய்து இருக்கிறாரே என்று கோலியை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கிண்டலடித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.