‘பிரனாப் முகர்ஜி அலுவலகத்தில் குளறுபடி’ – ஆப்பிள் எச்சரிக்கை விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐ போன்களில் ஊடுருவல் முயற்சி நடந்திருப்பதாக கூறிய ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாஜக தகவல் தொழிநுட்பப் பிரிவு தலைவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், “நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களில் நிதியுதவி மற்றும் நவீன வசதிகள் பெற்ற சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை பெற்றுள்ளனர். ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும்? எதிர்க்கட்சித் தலைவர்களின் போன்களில் ஊடுருவ யாருக்கு அதிக ஆர்வம் இருக்க முடியும்? பெகாசஸ் மர்மத்துக்கு பின்னர் (இப்போது வரை அது தீர்க்கப்படவில்லை) சந்தேகத்தின் விரல்கள் ஓர் அரசு நிறுவனத்தை சுட்டிக்காட்டுகின்றன. இப்போது வரை அது ஒரு சந்தேகம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, கடந்த 2011- ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி தனது அவலுவலகத்தில் குளறுபடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்த ஒரு செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அப்பதிவில் மாளவியா. “நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தபோது அப்போதைய நிதியமைச்சர் அலுவலகத்தில் குளறுபடி நடந்துள்ளது. அதுவும் எச்சரிக்கையா ப.சிதம்பரம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமித் மாளவியா குறிப்பிட்டுள்ள செய்தியில், தனது அலுவலகத்தில் மின்னணு சாதனங்களைப் பொருத்தப் பயன்படுத்தக்கூடிய பிசின் போன்ற ஒரு பொருள் கைப்பற்றப்பட்டதாக பிரனாப் முகர்ஜி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐ-போன்களில் ஊடுருவல் (ஹேக்கிங்) முயற்சி நடப்பதாக ஆப்பிள் நிறுவனம் விடுத்த எச்சரிக்கை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தவிவகாரத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது. இதன் பின்னணியில் செயல்படுபவர்களின் விவரம் அறியப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவைசி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஆகியோர் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரின் ஐ-போன்களில் நிதியுதவி மற்றும் நவீன வசதிகள் பெற்ற சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக, அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை மேற்கண்ட தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களின் ஐ-போன்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.